பங்களிப்பு ஓய்வூதியம் கிடைக்குமா? குளறுபடி தகவலால் புது குழப்பம்

cps எனப்படும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில், பிடித்தம் செய்த தொகையை திருப்பித் தர, அரசாணை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை' என்ற தகவலால், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி
அடைந்துள்ளனர்.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட பணி, தமிழக அரசின் மாநில கணக்காயர் அலுவலகத்தில் இருந்து, மாநில தகவல் தொகுப்பு மையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.


இத்திட்டத்தில், மாநிலம் முழுவதும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த, 2,300 கோடி ரூபாய், இன்னும் மத்திய அரசின் பங்களிப்பு நிதி ஆணையத்துக்கு செலுத்தவில்லை என தகவல் வெளியாகி, குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பங்களிப்பு நிதி குறித்து, தமிழக அரசின் தகவல் தொகுப்பு மையம் அளித்துள்ள தகவல், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், தென்காசி அருகேயுள்ள, குலசேகரன்பட்டியை சேர்ந்த மாரியம்மாள் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், பங்களிப்பு நிதி குறித்த விவரம்
கேட்டிருந்தார்.அதற்கு, 'அரசு பங்களிப்பு நிதி திட்டத்தில் பிடித்தம் செய்த நிதியை, இறந்த ஊழியர் குடும்பத்திற்கு, திருப்பித் தருவது குறித்து, அரசாணை பிறப்பிக்கப்படவில்லை' என, தகவல் தொகுப்பு மைய ஆணையர் பதில் அளித்துள்ளார்.

ஆனால், 2009ம் ஆண்டில், அப்போதைய நிதித்துறை முதன்மை செயலரும், தற்போதைய தலைமைச் செயலருமான ஞானதேசிகன் பிறப்பித்த அரசாணையில், 'பங்களிப்பு ஓய்வூதிய நிதியில், அரசின் பங்களிப்புடன், ஆண்டுக்கு, 8 சதவீதம் வட்டி சேர்த்து, ஊழியர்களுக்கு திருப்பி தரப்படும்' என, குறிப்பிட்டுள்ளார். தற்போது, 'அரசாணையே இல்லை' என, அரசு தகவல் தொகுப்பு மையம் முரண்பட்ட பதிலை தெரிவித்துள்ளது.

இது குறித்து, பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு பொதுச் செயலர் கூறியதாவது:ஏற்கனவே பல குழப்பங்கள் இருக்கும் நிலையில், நிதியை திருப்பித் தரவே ஆணை இல்லை என, அரசு தெரிவித்திருப்பது, அதிர்ச்சியாக உள்ளது. எனவே, பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட நிதி எப்போது கிடைக்கும்; அந்த தொகை, எங்கே முதலீடு செய்யப்பட்டுள்ளது என, அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும்.