மெயின் தேர்வு எழுத வழிகாட்டியது தினமலர் ஜே.இ.இ., மாதிரி தேர்வு எழுதிய மாணவர்கள் உற்சாகம்

மதுரை:"மதுரையில் தினமலர் நாளிதழ் நடத்திய ஜே.இ.இ., மெயின் மாதிரி தேர்வு, மெயின் தேர்வு எழுதுவதற்கு சிறந்த வழிகாட்டியாக அமைந்தது," என மாணவர்கள் தெரிவித்தனர்.



பிளஸ் 2 முடித்த பின், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., உட்பட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேர ஜே.இ.இ., எனப்படும் ஒருங்கிணைந்த பொது நுழைவுத்தேர்வை இரு கட்டமாக எழுத வேண்டும்.



ஜே.இ.இ., அட்வான்ஸ் தேர்வு மே 22ம், பிரதான தேர்வு, தேர்வு மையங்களில் ஏப்.,3 லும், 'ஆன்லைனில்' ஏப்.,9,10ல் நடக்கிறது. மாணவர் நலன் கருதி, மாதிரி 'மெயின்' தேர்வு தினமலர் நாளிதழ் சார்பில், மதுரை செயின்ட் மேரீஸ் பள்ளியில் நடந்தது. எழுதிய மாணவர்கள் கூறியதாவது:



கார்த்திகா, கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி, மதுரை: தினமலர் நாளிதழின் அறிவிப்பு வெளியான பின் தான் இத்தேர்வு எழுதும் எண்ணம் வந்தது. தேர்வில் இடம் பெற்ற வினாக்கள் மேலோட்டமாக இல்லாமல் பாடத்திற்குள் இருந்து கேட்கப்பட்டன. யோசித்து எழுதும் கேள்விகளாகவும் இருந்தன. மெயின் தேர்வுக்கு உதவியாக இருந்தது.



ஹரீஸ், சி.இ.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளி, மதுரை: கணிதம் எளிமையாக இருந்தது. 'புக்பேக்' வினாக்களும் கேட்கப்பட்டன. சி.பி.எஸ்.இ., மற்றும் பிளஸ் 1 பாடங்களையும் படிக்க வேண்டும் என இத்தேர்வு மூலம் தெரிந்தது. மெயின் தேர்வு குறித்து தெளிவு கிடைத்தது.



முகமது அப்துல் காசிம், எம்.எஸ்., சோலை நாடார் மெட்ரிக் பள்ளி, திண்டுக்கல்: ஐ.ஐ.டி.,யில் சேர முயற்சிக்கிறேன். நுழைவு தேர்வு எவ்வாறு இருக்கும் என தெளிவு கிடைத்தது. வேதியியல், கணிதம் பகுதி எளிமையாக இருந்தது. 'நெகட்டிவ்' மதிப்பெண் இருப்பதால் தெரியாத வினா எழுதவில்லை.



உமாதேவி, நாடார் சரஸ்வதி மெட்ரிக் பள்ளி, தேனி:'மெயின்' தேர்வுக்கு தயாராகும் எனக்கு, 'எந்த நிலையில் நான் உள்ளேன்,' என சுயபரிசோதனை செய்ய உதவியாக இருந்தது. நெடுவினா கேட்கப்படுவதால் நேரம் மேலாண்மை அவசியம். என்னை மேலும் தயார்படுத்த இது உதவியது.



சுஷ்மிதா, லயன்ஸ் மெட்ரிக் பள்ளி, பரமக்குடி: பி.இ., 'ஏரோநாட்டிக்கல் சயின்ஸ்' படிக்க உள்ளேன். மெயின் தேர்வு எப்படி இருக்கும் என தெரியாமல் தவித்த நேரத்தில் தினமலர்

நடத்திய இத்தேர்வு வழிகாட்டியது.



கீர்த்தனா, ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி, சிவகங்கை: தேர்வு குறித்த தெளிவு கிடைத்தது. கணிதம், வேதியியல், இயற்பியலில் 'புக்பேக்' வினா இடம் பெற்றாலும், அவை யோசித்து எழுதும் வகையில் இருந்தது. பிளஸ் 1 பாடங்களை படிக்க வேண்டும், என தெரிந்தது.



நந்தினி, எஸ்.எச்.என்.வி., மேல்நிலைப்பள்ளி, சிவகாசி: என் அப்பா பிளஸ் 2 முடித்த போது இத்தேர்வு எழுதி, ஐ.ஐ.டி.,யில் சேர முயற்சித்தார். முடியவில்லை. அவர் விருப்பப்படி நான் முயற்சிக்கிறேன். என் வெற்றிக்கு இந்த மாதிரி தேர்வு கண்டிப்பாக கை கொடுக்கும். இவ்வாறு கூறினர்.



பங்கேற்ற மாணவர்களுக்கு 7ஏரோஸ் சார்பில் 'ஜே.இ.இ., எக்ஸாம் ரேங்க் பூஸ்டர் புக்லெட்' இலவசமாக வழங்கப்பட்டது. மதிப்பெண் விபரம் தினமலர் நாளிதழில் விரைவில் வெளியாகும்.