தீபாவளி இனிப்பு தயாரிப்பில் கவனம்உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை

தீபாவளி இனிப்பு தயாரிப்பில், வருவாயை மட்டும் கருதாமல், மக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு தரமாக தயாரிக்க வேண்டும்' என, உணவு பாதுகாப்பு துறை எச்சரித்துள்ளது. இனிப்பு தயாரிப்பு மையங்களில் திடீர்

ஆய்வையும் துவக்கியுள்ளது.தீபாவளி பண்டிகைக்கு, இன்னும், நான்கு நாட்களே உள்ளன. இனிப்பு, கார வகைகளுக்கு, 'ஆர்டர்'கள் குவிந்த நிலையில், அதற்கான தயாரிப்பில், ஓட்டல்கள், 'கேட்டரிங்' மையங்கள், சுவீட் கடைகள்
மும்முரம் காட்டி வருகின்றன. உணவு தயாரிப்பில் கவனம் குறைந்தால் சிக்கலாகும் என்பதால், 'தயாரிப்பு நிறுவனங்கள் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும்' என, உணவு பாதுகாப்பு துறை எச்சரித்துள்ளது; தமிழகம் முழுவதும், திடீர் ஆய்வுகளும் நடத்தப்படுகின்றன.
இதுகுறித்து, சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர், லட்சுமி நாராயணன் கூறியதாவது:
* இனிப்பு, கார வகைகளை தயாரிக்க சுத்தமான தண்ணீர், எண்ணெய் பயன்படுத்த வேண்டும். ஏற்கனவே பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. தயாரிக்கும் இடம் சுத்தமாக, காற்றோட்டமாக இருக்க வேண்டும்
* உணவுப் பொருட்களை கையாள்வோர் மருத்துவ சான்று பெற்றிருக்க வேண்டும். கையுறை, தொப்பி, முக கவசம் அணிய வேண்டும். இனிப்பு, கார வகைகளை, 'பேக்கிங்' செய்து விற்பனைக்கு அனுப்பும் போது, தயாரிப்பு தேதி, உபயோக காலம், 'பேட்ச்' எண் போன்ற தகவல்களுடன் கூடிய, 'லேபிள்' ஒட்ட வேண்டும்
* உணவு கழிவுகள், வீணாகும் இனிப்பு, கார வகைகளை குப்பை கூடையில் வைத்து, அப்புறப்படுத்த வேண்டும்; தயாரிக்கும் இடத்தில் தேக்கி வைக்கக் கூடாது. கரப்பான் பூச்சி, ஈ தொல்லை இல்லாதபடி, உணவுப்பொருட்களை மூடி வைக்க வேண்டும்
* விற்பனை விவரங்கள் குறித்த பதிவேட்டை பராமரிக்க வேண்டும். வருவாயை மட்டும் கருதாமல், மக்கள் சுகாதாரத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என, அறிவுறுத்தியுள்ளோம்; விதிமுறைகளை பின்பற்றாவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்