திறனாய்வு தேர்வில் தவறான விடையால் குழப்பம்

தமிழகத்தில், 1.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற, தேசிய திறனாய்வு தேர்வில், ஒரு வினாவுக்கு, தவறான விடை கொடுத்திருந்ததால், மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆராய்ச்சி படிப்பு வரை, மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு இரண்டு கட்ட தேசிய திறனாய்வுத் தேர்வை எழுத வேண்டும். மாநில அளவில் தேர்ச்சி பெறும், முதல், 300 மாணவர்கள், தேசிய தேர்வு எழுதலாம். இதில், முதல், 1,000 இடங்களுக்குள் வந்தால், உதவித்தொகை கிடைக்கும்.

மாநில அளவிலான முதற்கட்ட தேர்வு, நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. இதில், 6,766 பள்ளிகளைச் சேர்ந்த, 1.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். அறிவுத்திறன் தேர்வு, கல்வித்திறன் தேர்வு என, இரண்டு தாள்களுக்கு தலா, 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடந்தது. முதல் தாளில், 50 மதிப்பெண்களுக்கு ஆங்கில இலக்கணத் தேர்வு உண்டு.

இதில், குறைந்தபட்சம், 20 மதிப்பெண்கள் பெற்றால் தான், மற்ற கேள்விகளுக்கு விடைகள் திருத்தப்படும்; தேர்விலிருந்து மாணவர் நீக்கப்படுவார். நேற்றைய தேர்வில், முதல் தாளில், சிந்தனை மற்றும் கணிதத் திறன் குறித்த, 25ம் எண் கேள்விக்கு, வினாத்தாளில் கொடுக்கப்பட்ட நான்கு விடைகளும் தவறாக இருந்தன.

அந்தக் கேள்விக்கு, 'ரூட்' அடையாளத்துடன், 90 (√90) என்பது விடையாக வர வேண்டும். ஆனால், அந்த விடை கொடுக்கப்படவில்லை. அதனால், மாணவர்கள் நீண்ட நேரம் குழப்பம் அடைந்தனர். இந்த கேள்விக்கு எப்படி மதிப்பெண் வழங்கப்படும் என, தேர்வு மையத்தில் எந்த அறிவிப்பும் வழங்கப்பவில்லை.