கேஸ் சிலிண்டருக்கு விரைவில் ஆன்லைனில் பணம் செலுத்தும் வசதி

சமையல் எரிவாயு சிலிண்டர் நுகர்வோர்கள் ஆன்லைனில் பணம் செலுத்தி, சிலிண்டர்களைப் பதிவு செய்யும் முறை விரைவில் தொடங்கப்படவுள்ளது.
ஐஓசிஎல், பிபிசிஎல், ஹச்பிசிஎல் ஆகிய நிறுவனங்கள் புனேயில், தங்களின் வாடிக்கையாளர்களுக்காக ஆன்லைனில் முன்பதிவு செய்யும் சோதனை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, இத்திட்டம் நடைமுறைக்கு வரும்.
இதற்கான மென்பொருள் தற்போது சோதனையில் இருப்பதாகவும், ஒரு மாதத்தில் ஆன்லைன் கட்டண வசதி அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆன்லைனில் பதிவு செய்துள்ள ஹச்பிசிஎல் நுகர்வோர்கள் சிலர், கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்திக் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்கின்றனர்.
இதுகுறித்துப் பேசிய கெல்லீஸைச் சேர்ந்த வாடிக்கையாளர் அதிதி சிங், ''தற்போது கார்டு மூலமாகவே கட்டணம் செலுத்துகிறேன்; இதனால் டெலிவரி பையன் வரும்போது பணத்தைத் தேடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை'' என்றார்.
ஹச்பிசிஎல் முகவர் தட்சிணாமூர்த்தி, ''ஆன்லைனில் பணம் செலுத்தப்படுவதால், நுகர்வோர்கள் வீட்டில் இல்லையென்று முன்பதிவை ரத்து செய்யும் நிலை இருக்காது'' என்றார்.
சமூக ஆர்வலரான சடகோபன் இது குறித்துப் பேசும்போது, ''ஆன்லைனில் கட்டணம் செலுத்தும் வசதி நடைமுறைக்கு வந்தாலும், நிறுவனங்கள் பணம் செலுத்தும் முறையையும் தொடர வேண்டும்'' என்றார்.
தற்போது முன்பதிவு, செல்பேசியில் ஐவிஆர்எஸ் மூலம் செய்யப்படுகிறது. 1.54 கோடி எல்பிஜி நுகர்வோர்களில் வெகுசிலரே ஆன்லைன் முறையைப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.