வங்கி கடன் செலுத்தாமல் ஏமாற்றுவோர் மீது நடவடிக்கை பாயும்; அருண் ஜெட்லி

புதுடில்லி : ''வசதி இருந்தும், கடனை திருப்பித் தராமல் இருப்போர் மீது, அனைத்து விதமான நடவடிக்கையும் எடுக்க, வங்கிகளுக்கு முழு அதிகாரம் உள்ளது,'' என, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.



டில்லியில், அருண் ஜெட்லி தலைமையில், பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள், ரிசர்வ் வங்கி அதிகாரிகள், அரசு துறை செயலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், வங்கிகளின் வராக் கடன் பெருகி வருவது, சர்வதேச மந்த நிலையால் உருக்கு மற்றும் அலுமினிய நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, விஜய் மல்லையாவின் கிங் பிஷர்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், 7,000 கோடி ரூபாய் வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாமல் இருப்பது உட்பட, பல பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

இதையடுத்து, அருண் ஜெட்லி கூறியதாவது: வசதி இருந்தும் கடனை திருப்பிச் செலுத்தாமல் இருப்போர் மீது, நடவடிக்கை எடுக்க வங்கிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. விரைவில், திவால் சட்டமும் அமலுக்கு வர உள்ளது. இத்துடன், வங்கிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு மேலும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உருக்கு, அலுமினிய நிறுவனங்களின் பிரச்னைக்கு தீர்வு காண, வருவாய் துறையுடன் வங்கிகள் ஆலோசனை நடத்த வேண்டும். துறை சார் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு, பொருளாதாரம் வளர்ச்சி கண்டால், வங்கிகளின் நெருக்கடி குறையும்.

வங்கிகளின் வராக் கடன் உயர்ந்து வருவதை ஏற்க முடியாது. தற்போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி சூடுபிடித்துள்ளதால், வங்கிகள் இதுவரை சந்தித்து வந்த நெருக்கடிகள் விரைவில் குறையத் துவங்கும். இதற்கு, வராக் கடன் வசூலிப்பில் வங்கிகள் காட்டும் தீவிரமும், கடனுக்கான தேவை அதிகரித்து வரும் சூழலும் துணை புரியும். மத்திய அரசு, ஒவ்வொரு துறையின் வளர்ச்சிக்கும் திட்டங்கள் தீட்டி செயல்படுத்தி வருகிறது. இவற்றின் பலன், ஒரே நாளில் தெரிந்து விடாது; குறிப்பிட்ட காலத்தில், நிச்சயம் முன்னேற்றம் ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.