எரிமலை எப்படி வெடிக்கும்

பூமியின் உட்புறத்திலுள்ள மிகவும் வெப்பமான கற்குழம்பு வெடித்து வெளியேறும் பகுதியை எரிமலை என்கிறோம். வெப்பமான பாறைகள் மேல்நோக்கி வருவதாலும் எரிமலைகள் உண்டாகின்றன. உமிழப்படும் எரிமலைக் குழம்பு "மாக்மா' எனப்படும். எரிமலையை ஆங்கிலத்தில்
"வால்கனோ' என்று அழைப்பர். இந்த சொல் இத்தாலிய மொழியிலிருந்து வந்தது. ரோமானிய அக்னி கடவுளுக்கு "வால்கன்' என்று பெயர். இதிலிருந்துதான் "வால்கனோ' என்ற சொல் வந்தது. எரிமலைகள் குறித்து ஆய்வு செய்யும் படிப்புக்கு "வால்கனோலஜி' என்று பெயர்.

வடிவம்:

பொதுவாக எரிமலைகள் கூம்பு வடிவம் கொண்டதாக இருக்கும். அதன் உச்சி, எரிமலைக்குழம்பை உமிழும் தன்மை பெற்றிருக்கும். இதிலிருந்து சாம்பல் மற்றும் வெப்பக்கற்கள் வெளிவரும். எரிமலைகள் அதன் தன்மை, வடிவத்துக்கேற்ப பிரிக்கப்படுகிறது. அவை
* கவச எரிமலைகள்
* சுழல் வடிவ எரிமலைகள் (கலப்பு எரிமலைகள்)
* ராட்சத எரிமலைகள்
* ஆழ்கடல் எரிமலைகள்
* உறைபனியின் கீழுள்ள எரிமலைகள்
* புதைசேற்று எரிமலைகள்

மூலப்பொருட்கள்:

எரிமலைக் குழம்பான மாக்மாவில் சிலிகா என்ற வேதிப்பொருளே அதிகம் உள்ளது. மாக்மாவில் உள்ள சிலிகா சதவீதத்தை பொறுத்து நான்கு வகையாக பிரிக்கின்றனர்.63 சதவீதத்துக்கும் அதிகமான சிலிகாவை கொண்டிருந்தால் அதை "பெல்சிக்' என அழைக்கின்றனர். இவை அதிக பிசுபிசுப்புத் தன்மை கொண்டவை. அதிக நீர்மமாக இல்லாமல், கெட்டியான குழம்பு போல் ஓடும். கலிபோர்னியாவிலுள்ள லாஸன் எரிமலை "பெல்சிக்' வகைக்கு எடுத்துக்காட்டு.எரிமலைக்குழம்பு 52-63 சதவீதம் சிலிகாவை கொண்டிருந்தால் அவை இடைநிலை கலவை எரிமலைக்குழம்பு எனப்படுகிறது. இந்த வகை குழம்பை உமிழக்கூடிய எரிமலையை "ஆன்டெசிடிக்' என அழைக்கின்றனர். இந்தோனேஷியாவில் உள்ள மவுன்ட் மெராபி எரிமலை இதற்கு ஒரு உதாரணம்.மாக்மா 45-52 சதவீத சிலிகாவை கொண்டிருந்தால் அதை "மாபிக்' என்கின்றனர். இதில் அதிக அளவு மக்னீசியம் காணப்படுகிறது. இரும்பும் இதில் உள்ளது. மிகக்குறைந்த பிசுபிசுப்பு தன்மை கொண்டவையாக இருக்கும். ஹவாய் தீவில் உள்ள மானா லோவா, கிலாயூ இந்த வகையைச் சேர்ந்த எரிமலைகள்.மாக்மாவில் உள்ள சிலிகா 45 சதவீதத்துக்கும் குறைவாக உள்ள எரிமலைகளை "கொமேடியாட்' என்பர். இதன் குழம்பை "அல்ட்ரா சல்பூரிக்' என அழைப்பர். இந்த வகை எரிமலைகள் மிகவும் அரிதானவை. பூமி உருவான காலம் முதல், சில முறையே இந்த வகை எரிமலைகள் குழம்பை உமிழ்ந்துள்ளன.

செயல்பாடுகள்:

தொடர்ந்து உமிழும் எரிமலைகளை உயிர்த்துடிப்புடையவை எனவும், பண்டைய காலத்தில் உமிழ்ந்து தற்போது அமைதியாக இருப்பவற்றை உறங்கும் எரிமலைகள் எனவும், இதுவரை உமிழாமல் இருப்பவற்றை அழிந்து விட்டவை எனவும் அழைக்கின்றனர்.

தற்போதுள்ள முக்கிய எரிமலைகள்:
* அவாசின்ஸ்கி, கொர்யாக்ஸ்கி, காம்சக்தா, ரஷ்யா
* நிவேடா டி கொலிமா, ஜலிஸ்கோ, மெக்சிகோ
* மவுன்ட் எட்னா, இத்தாலி
* கெலேரஸ், நரீனோ, கொலம்பியா
* மவுனா லோவா, ஹவாய், அமெரிக்கா
* மவுன்ட் மெராபி, மத்திய ஜாவா, இந்தோனேஷியா
* மவுன்ட் நைரோகாங்கோ, காங்கோ
* மவுன்ட் ரைனிர், வாஷிங்டன், அமெரிக்கா
* சகுராயிமா, ஜப்பான்
* சான்டமரியா, சான்டியாகிடோ, கவுதமலா
* சன்டோரினி, சைக்கிளேட்ஸ், கிரீஸ்
* தால், லுசான், பிலிப்பைன்ஸ்
* டெயிட், ஸ்பெயின்
* உலான், நியூகினியா
* மவுன்ட் அன்சென், ஜப்பான்
* வசூவியஸ், இத்தாலி