வாக்காளர் பட்டியலில் பிழை நீக்குவதற்கு புதிய 'சாப்ட்வேர்'

  கோவை: ''வாக்காளர் பட்டியலில், முறையாக பிழைகளை மாற்ற, புதிய சாப்ட்வேர் பயன்படுத்தப்படுகிறது,'' என, தேர்தல் கமிஷன் செயலர் ராவ் கூறினார்.கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், அவர் பேசியதாவது:


       நாடு முழுவதும், சட்டசபை, லோக்சபா தொகுதிகளை ஆய்வு நடத்தி சீரமைப்பதில், நிறைய சிரமங்கள் உள்ளன. அரசியல் கட்சிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஒத்துழைக்க வேண்டும். லோக்சபா மற்றும் சட்டசபை தொகுதிகளில் சில, பரப்பளவில் சிறியதாகவும், மக்கள் தொகையில் அதிகமாகவும் இருக்கும்; சில மாநிலங்கள், பரப்பளவில் அதிகமாகவும், மக்கள் தொகையில் குறைவாகவும் இருக்கும். வாக்காளர் அடையாள அட்டையில், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், பெயர் நீக்க பணிகளில் அதிகாரிகள் விழிப்புடன் இருப்பது அவசியம். போதுமான ஆதாரங்களை பெற்று திருத்தம் செய்ய வேண்டும். ஒரு வாக்காளருக்கு, வெவ்வேறு முகவரிகளில், இரு வாக்காளர் அடையாள அட்டைகள் என்ற குழப்பங்கள், விரைவில் முடிவுக்கு வரும். பெயர் பிழைகளை, முறையாக மாற்றம் செய்ய, புதிய சாப்ட்வேர் பொருத்தப்பட்டுள்ளது.இவ்வாறு ராவ் பேசினார்.