5 நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை:வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

வங்கக் கடலில் உருவான புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து வருகிறது. இதனால், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் அடுத்த 5 நாள்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.

 
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் சனிக்கிழமை கூறியதாவது:
தென் மேற்கு வங்கக் கடலில் உருவாகியிருந்த மேலடுக்குச் சுழற்சியானது, தென் மேற்கு, அதை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் அருகே நகர்ந்துள்ளது. இது புதியக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகி, வலுவடைந்து வருகிறது. எனவே, அடுத்த 48 மணி நேரத்தில் தீவிரக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாகவும், காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் (புயல் சின்னம்) மாறும் வாய்ப்புள்ளது.

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முதல் 5 நாள்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 3 நாள்களுக்கு பலத்த மழை பெய்யும்.
அடுத்த 24 மணி நேரத்துக்கு, மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்குள் செல்ல வேண்டும். அடுத்து வரும் இரண்டு நாள்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். மேலும் சுமத்ரா அருகே நிலை கொண்டிருந்த புயல் வலுவிழந்து வருகிறது என்றார் அவர்.
மழை பதிவு (மி.மீட்டரில்):
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகையில் 190 மி.மீட்டர் மழை பதிவாகியது. அதற்கு அடுத்தபடியாக, சீர்காழியில் 130 மி.மீ. மழையும், திருச்செந்தூரில் 90 மி.மீ. மழையும், சிதம்பரம், நாங்குநேரி உள்ளிட்ட சில இடங்களில் 70 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது என்றார்