30 லட்சம் பேருக்கு காஸ் மானியம் 'கட்!'

இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு, தமிழகத்தில், 1.60 கோடி வீட்டு சமையல்காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர் உள்ளனர். மத்திய அரசு, மானிய செலவை குறைக்க, ஜனவரி மாதம், நேரடி மானிய திட்டத்தை அறிமுகம்
செய்தது.இத்திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர், சந்தை விலையில், சிலிண்டர் வாங்க வேண்டும். பின், அதற்கான மானியம், அவரின் வங்கி கணக்கில் வரவுவைக்கப்படும். தற்போது, ஆண்டுக்கு, 12 சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.


         மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ., - தொழிலதிபர்கள் என, வசதி படைத்த பலர், மானிய விலை சிலிண்டரை பயன்படுத்தி வருகின்றனர். இதை தடுக்க, வருமான வரி செலுத்துவோருக்கு, மானியம் ரத்து செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:நாட்டில், 16 கோடி காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர் உள்ளனர். இதில், ஐந்து கோடி பேர், ஆண்டுக்கு, 20 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுகின்றனர். ஆனால், தற்போது, 36 லட்சம் பேர் மட்டும் தான், காஸ் மானியத்தை விட்டு கொடுத்துள்ளனர். வசதியானவர்கள், விட்டு கொடுக்கும் மானியத்தை பயன்படுத்தி, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு, இலவசமாக சிலிண்டர் வழங்கப்படுகிறது. தமிழகத்தில், 30 லட்சம் பேர், வருமான வரி செலுத்தி வருகின்றனர். ஆனால், 1 சதவீதம் பேர் கூட, மானியத்தை விட்டு கொடுக்கவில்லை. எனவே, வருமான வரி செலுத்துவோருக்கு, மானிய சிலிண்டரை நிறுத்த, மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.