பள்ளியில் மது குடிக்கும் அவலம்: 2 ஆண்டில் 16 பேர் டிஸ்மிஸ்

நாமக்கல் மாவட்டத்தில் மட்டும், கடந்த இரண்டு ஆண்டுகளில், மது குடித்த அரசு பள்ளி மாணவ, மாணவியர், 16 பேர், 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டுள்ளனர். 

             தமிழகத்தில், மது அருந்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. வயது பாகுபாடின்றி ஆண், பெண் என பலரும், மதுவுக்கு அடிமையாகின்றனர். அதில், சிறு குழந்தைகள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவியரும் தப்பிவில்லை.'வாட்ஸ் ஆப்' இது, 'வாட்ஸ் ஆப்' மூலம் வெட்டவெளிச்சமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு அருகே டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ளதால், மாணவ, மாணவியர் பள்ளிக்கு போதையில் வருவது சர்வ சாதாரணமாகி விட்டது. அதன் காரணமாக, நம் கலாசாரம் சீரழிந்து வருவதை தடுக்க வழியின்றி, பெற்றோர் மற்றுமின்றி பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. 



கடந்த, சில மாதங்களுக்கு முன், பிளஸ் 2 மாணவி ஒருவர், காதல் தோல்வியால் மது அருந்தி போதையில் சாலையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் கோவையில் அரங்கேறியது. 

பிறந்த நாள் விருந்து:

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த, நான்கு மாணவியர், கடந்த, 21ம் தேதி, வகுப்பறையில், பிறந்த நாளை முன்னிட்டு மது விருந்து கொடுத்ததில், போதையில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். அவர்களை பள்ளித் தலைமையாசிரியை கிருஷ்ணவேணி, டிஸ்மிஸ் செய்தார். இச்சம்பவம், ஆசிரியர்கள், பெற்றோர் என பல்வேறு தரப்பினரையும், கடும் அதிர்ச்சிக்கு உளளாக்கியுள்ளது. 

கடந்த சில மாதங்களுக்கு முன், இதே மாவட்டத்தில், மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், மது குடித்து விட்டு பள்ளிக்கு வந்த, ஆறு மாணவர்களை, பள்ளித்தலைமையாசிரியை சிவகாமி, டிஸ்மிஸ் செய்தார்.
பள்ளியில் ரகளை:

கடந்த ஆண்டு, திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மதுகுடித்துவிட்டு, பள்ளியில் ரகளையில் ஈடுபட்ட, பிளஸ் 2 மாணவர்கள், ஆறு பேரை, பள்ளித் தலைமையாசிரியர் லோகநாதன், 'டிசி' கொடுத்து வெளியேற்றினார். இதற்கிடையே, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த, 14 வயது மாணவர், மதுவுக்கு அடிமையாகி, பள்ளிக்கு செல்லாமல், பெற்றோரை மிரட்டி வந்துள்ளார். 

இந்நிலையில், சரக்கு அடிக்க பெற்றோர் பணம் தரமறுத்ததால், மனமுடைந்த மாணவர், கடந்த சில நாட்களுக்கு முன் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் அரங்கேறி உள்ளது.

இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் மட்டும், கடந்த, இரண்டு ஆண்டுகளில், மூன்று அரசு பள்ளிகளில், 12 மாணவர், நான்கு மாணவியர் என, மொத்தம், 16 பேர், பள்ளி வகுப்பறையில் மது குடித்ததால், 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் மீண்டும், அதே பள்ளியிலோ அல்லது மாற்றுப்பள்ளியிலோ சேர்த்துக் கொள்ளப்பட்டாலும், இதுபோன்ற நிலை தொடராமல் இருக்க, போதிய கவுன்சலிங் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மாணவ, மாணவியர் மதுவுக்கு அடிமையாகி வருவது, ஒட்டுமொத்த சமூக சீரழிவுக்கான அடையாளம் தான். நாங்கள் மட்டும், தனியாக என்ன செய்ய முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.