மீன்வளத் துறையில் பணி: விண்ணப்பிக்க அழைப்பு

மீன்வளத் துறையில் புள்ளியியல் சேகரிப்பாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
      இதுகுறித்து ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
மீன்வளத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் நிலைத்த வாழ்வாதாரத்துக்கான மீன்வள மேலாண்மைத் திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் மீன்வளம் தொடர்பான புள்ளி விவரங்க
ளை சேகரிப்பதற்கு தாற்காலிகமாக புள்ளிவிவர சேகரிப்பு உதவியாளர் ஒருவர் ஓராண்டுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளார்.
இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மீன்வள பட்டப்படிப்பு அல்லது கடல் உயிரியல் பட்டப்படிப்பு அல்லது விலங்கியல் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும், கணினியில் அடிப்படை அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.
இப்பணியில் முன் அனுபவம் இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். 21 வயது முதல் 40 வயது வரையில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பல்வேறு மீனவ கிராமங்களுக்கு பயணம் சென்று மீன்வள விவரங்கள் சேகரிப்பதற்கான உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். மாத ஒப்பந்த ஊதியமாக ரூ.12 ஆயிரம் வழங்கப்படும்.
எனவே தகுதியுள்ளவர்கள் தேவையான சான்றிதழ்களுடன் வரும் 29-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு மீன்வள துணை இயக்குநர் (மண்டலம்), எண்.1, ஸ்டேட்பாங்க் காலனி, செம்மண்டலம், கடலூர் என்ற முகவரியில் ஆஜராக வேண்டும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.