அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என்று துணை வேந்தர் தெரிவித்துள்ளார்.


வேலைவாய்ப்பு முகாம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் கடந்த 1-ந்தேதி முதல் 12-ந்தேதி வரையிலும் பல்கலைக்கழக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் ‘அசென்டர்’, ‘காக்னிசன்ட்’, ‘ஐ.பி.எம்.’, ‘இன்போசிஸ்’ மற்றும் ‘டி.சி.எஸ்.’ ஆகிய 5 தகவல் தொழில்நுட்ப கம்பெனிகள் பங்கேற்றன. இந்த கம்பெனிகளில், மொத்தம் ரூ.3.5 லட்சம் சம்பள தொகுப்பில் 2,122 பணி இடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

என்ஜினீயரிங் மாணவர்களுக்கு...

முகாமில், தகுதியின் அடிப்படையில் ஆயிரத்து 500 மாணவ-மாணவிகள் வேலைவாய்ப்பு பெறுகின்ற ஆர்வத்துடன் பங்கேற்றனர். இவர்களில் ஆயிரத்து 200 பேர் தகவல் தொழில்நுட்ப கம்பெனிகளில் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். இதற்கான செயல்பாடுகள் நடைபெற்று வருகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் வேலைவாய்ப்பு பெறும் வகையில், வருகிற டிசம்பர் மாதம் மாநில அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிட்டிருப்பதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.ராஜாராம் தெரிவித்துள்ளார்.

3-ம் கட்ட முகாம்

அண்ணா பல்கலைக்கழகத்தின், பல்கலைக்கழக தொழில் ஒத்துழைப்பு மையத்தின் இயக்குனர் பேராசிரியர் டி.தியாகராஜன் கூறும்போது, முதல் கட்டமாக நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாமில் தகவல் தொழில்நுட்ப கம்பெனிகளில் 400 மாணவர்கள் ரூ.4.5 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரையிலான சம்பள தொகுப்பில் வேலைவாய்ப்பு பெற்றனர்.

3-ம் கட்டமாக நடைபெற உள்ள வேலைவாய்ப்பு முகாமில் வேலைவாய்ப்பு தரும் நோக்கில் அதிகமான கம்பெனிகள் பங்குபெறும். ஆகையால் கூடுதலாக 500 மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.