வீட்டில் சூரிய ஒளி மின்சாரம் குறைந்தது கட்டணம்

காரைக்குடி:மொட்டை மாடியில் சோலார் அமைத்ததால் ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்தியவர்கள், 10ல் ஒரு மடங்கு மட்டுமே கட்டணமாக செலுத்துகின்றனர்.தமிழகத்தில் 250 முதல் 300 நாட்கள் வரை முழுமையான சூரிய ஒளி கிடைக்கிறது. மின்வெட்டு பிரச்னை தீவிரமாகி வரும் நிலையில், மாற்றான சூரிய ஒளி மின்சாரத்தை தயாரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


       சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களுக்கு மத்திய அரசின் மரபுசரா எரிசக்தி துறை, தமிழக அரசின் எரிசக்தி மேம்பாட்டு முகமை (டெடா) மானியங்களை வழங்கி வருகிறது. ஒரு கிலோவாட் சூரிய மின்சக்தி அமைக்க மத்திய அரசு 30 சதவீதம், மாநில அரசு 20 சதவீதம் மானியம் வழங்குகிறது. காரைக்குடி மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் 8 பேர் இதுவரை சோலார் தகடுகளை வைத்து, மின் உற்பத்தி செய்வதுடன், மின்வாரியம் மூலம் வழங்கப்படும் 'நெட் மீட்டர்' மூலம் மற்ற வீடுகளுக்கும் வழங்கி வருகின்றனர்.
காரைக்குடி ஹவுசிங்போர்டு முருகானந்தம் கூறியதாவதுஒரு கிலோவாட் சோலார் பேனல் அமைக்க ரூ.ஒரு லட்சத்து 10 ஆயிரம் வரை செலவானது. மத்திய, மாநில அரசு மானியம் ரூ.50 ஆயிரம் கிடைத்தது. நாள் ஒன்றுக்கு நான்கு முதல் 5 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்
படுகிறது. கடந்த மாதம் 300 யூனிட் உற்பத்தியானதில், 50 யூனிட் மின்சாரத்தை மட்டும் பயன்படுத்தினேன். 250 யூனிட் மின்வாரியத்துக்கு அளிக்கப்பட்டது. இரவு நேரத்தில் மின்வாரியம் மூலம் நான் பயன்படுத்திய மின்சாரத்துக்கு ஈடாக இது கழித்து கொள்ளப்பட்டது. மாதம் ரூ. 1000 வரை மின் கட்டணம் செலுத்தி வந்தேன். கடந்த மாதம் 90 ரூபாய் கட்டணம் செலுத்தினேன், என்றார்.
மாதம் ரூ.500 ரூபாய் சேமிப்பு என்றால், ஓராண்டுக்கு ரூ.6000. 25 ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம். மானியம் போக இவர் செலுத்தியது ரூ.60 ஆயிரம். எனில் சேமிப்பு 90 ஆயிரம். வருங்காலத்தில் சோலார் பேனல்களின் விலை இன்னும் குறைய கூடும். இவற்றை அமைப்பதன் மூலம் பெருகி வரும் மின்தேவையை கட்டுப்படுத்த நாம் அரசுக்கு உதவி செய்கிறோம்.