பன்முகத்தன்மையை பறைசாற்றும் வகையில் அப்துல் கலாம் நினைவு அஞ்சல்தலை வெளியீடு

சென்னை,

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பன்முகத்தன்மையை பறைசாற்றும் வகையில் சிறப்பு அஞ்சல் தலை, உறைகள் வெளியிடப்பட்டன.

கலாம் நினைவு அஞ்சல் தலை

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 84-வது பிறந்த நாளையொட்டி, அவரது பன்முகத்தன்மையை பறைசாற்றும் அஞ்சல் தலைகள், உறைகளை வெளியிடும் விழா, சென்னை, அண்ணாசாலையில் உள்ள அஞ்சல் தலை சேகரிப்பு சேமிப்பு மையத்தில் நடந்தது.

சிறப்பு அஞ்சல் தலைகள், அஞ்சல் உறையை தமிழக அஞ்சல் வட்டத்தின் தலைமை அஞ்சல்துறைத் தலைவர் சார்லஸ் லோபோ வெளியிட்டார். முதல் சிறப்பு அஞ்சல் தலை, அஞ்சல் உறைகளை சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் பெற்றுக் கொண்டார்.

6 லட்சம் அஞ்சல் தலைகள்

பின்னர் சார்லஸ் லோபோ, நிருபர்களிடம் பேசுகையில், “அப்துல் கலாம் சிறப்பு அஞ்சல் தலை, அஞ்சல் உறை சென்னை தவிர, கோவை, திருச்சி, மதுரை, ஊட்டி ஆகிய இடங்களிலுள்ள அஞ்சல் தலை சேகரிப்பு சேமிப்பு மையங்களிலும் வெளியிடப்பட்டுள்ளன” என கூறினார்.

சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் கூறும்போது, ‘அப்துல்கலாமின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில், ரூ.5 மதிப்பிலான அஞ்சல் தலைகள் பல்வேறு வர்ணங்களில் வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் 6 லட்சம் அஞ்சல் தலைகள், ஐதராபாத்தில் உள்ள செக்யூரிட்டி அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளன. சிறப்பு அஞ்சல் தலை, அஞ்சல் உறைகள் அனைத்து அஞ்சல் தலை சேகரிப்பு சேமிப்பு மையத்திலும், பிரதான அஞ்சலகங்களிலும் விற்பனைக்கு கிடைக்கும்’ என்றார்.

ராமேசுவரத்திலும் வெளியீடு

அப்துல் கலாம் பிறந்த ராமேசுவரத்தில் கோசுவாமி மட வளாகத்தில் ராமநாதபுரம் கலெக்டர் நந்தகுமார் தலைமையில் நடந்த விழாவில், அப்துல் கலாம் சிறப்பு தபால்தலையை தென்மண்டல அஞ்சல்துறை தலைவர் சாருகேசி வெளியிட்டார். அப்துல் கலாமின் அண்ணன் முகம்மது முத்து மீரா லெப்பை மரைக்காயர் பெற்றுக்கொண்டார்.

விழாவில், அன்வர் ராஜா எம்.பி., உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதேபோன்று டெல்லியில் டி.ஆர்.டி.ஓ. பவனில் நடந்த விழாவில் அப்துல் கலாம் நினைவு அஞ்சல் தலையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டு சிறப்பித்தார். இந்த விழாவில் மத்திய மந்திரிகள் மனோகர் பாரிக்கர், வெங்கையா நாயுடு, ரவிசங்கர் பிரசாத், ஹர்சவர்தன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.