சூரியனில் 'மெகா' துளை: 'நாசா' கண்டுபிடிப்பு.

அக்டோபர், 10ல், சூரியனின் வளிமண்டலத்தில், மிகப் பெரிய துளை உருவானதை, அமெரிக்காவின் சூரிய கண்காணிப்பு ஆய்வகம் படம் பிடித்திருக்கிறது. பூமியின் சுற்றளவை விட, 50 மடங்கு பெரிதாக இருக்கும் இந்த துளை, தற்காலிகமானதுதான் என்கின்றனர், அமெரிக்க
விண்வெளி அமைப்பான, 'நாசா'வின் விஞ்ஞானிகள்.
சூரியனிலிருந்து, பெருமளவு ஆற்றலும், வாயுக்களும் எப்போதும் வெளியேறியபடியே இருக்கும். இந்த வெளிப்பாடு சற்று குறைவாக இருக்கும் பகுதி, ஒரு பெரிய துளை போலத் தோற்றம் தரும். இந்தப் பகுதியிலிருந்து, மிக வேகமான சூரியக் காற்று வெளிப்பட்டு, பூமியை நோக்கி வரும். இதை, 'பூகோள காந்தப் புயல்' என, வானியல் வல்லுனர்கள் அழைக்கின்றனர்.
இந்தப் புயல், பூமியின் காந்தப் புலத்தோடு மோதும்போது, ஆற்றல் கடத்தப்படுகிறது. இது, 'அரோரா' என்ற அழகிய ஒளி ஜாலத்தை வானில் ஏற்படுத்தும். அக்., 10ல், படம் பிடிக்கப்பட்ட துளையால், நார்வேயில், அருமையான அரோரா காட்சி, வானில் அரங்கேறியது.
சூரியனில் ஏற்படும் காந்தப் புயலால், பூமியில் சில பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக ரேடியோ, ரேடார் மற்றும் ஜி.பி.எஸ்., எனப்படும், இருக்குமிடத்தை அடையாளம் காட்டும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் செயல்பாடுகள் பாதிக்கப்படும்.
சூரிய காந்தப் புயல், விலங்குகள் மற்றும் பறவைகளின் திசை அறியும் திறனிலும், தடுமாற்றங்களை உண்டாக்கும். வானில் பறக்கும் புறாக்கள் முதல், கடலின் ஆழத்தில் உள்ள திமிங்கிலங்கள் வரை, அனைத்தும் குழம்பிப்போவதுண்டு. சூரியப் புயலின் போதுதான் திமிங்கிலங்கள் திசைமாறி கடற்கரைக்கு வந்து உயிரை மாய்த்துக் கொள்கின்றன.
இந்த சூரிய காந்தப் புயல், இன்னும் பல மாதங்களுக்கு நீடிக்கும் என்பதால், அடுத்து கனடா, கிரீன்லாந்து, ரஷ்யா மற்றும் ஸ்காண்டினேவிய பகுதிகளில் அரோரா ஒளி ஜாலம் ஏற்படும் என, நாசா கணித்துள்ளது. இந்த வண்ணக் கலவையான அரோராக்களை படம்பிடிக்க, வானியல் புகைப்பட பிரியர்கள் காத்திருக்கின்றனர்.