சென்னையில் இன்று பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்

சென்னையில் இன்று பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்: 23 ஆயிரம் பணியிடங்களுக்கு 65 ஆயிரம் பேர் விண்ணப்பங்கள் அளிப்பு!! 
சென்னை தண்டையார்பேட்டையில் சனிக்கிழமை நடைபெறும் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாமில், 302 பெரு நிறுவனங்கள் காட்சி அரங்குகளை அமைத்துள்ளன. இதில், 23 ஆயிரம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த முகாம் மூலம் பணிகளைப் பெற த
மிழக அரசு வேலைவாய்ப்புத் துறையின் இணையதளமான (www.tnvelaivaaippu.gov.in)-இல் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். தமிழக அரசின் தொழிலாளர்-வேலைவாய்ப்புத் துறையும், சென்னை மாவட்ட நிர்வாகமும் இணைந்து, முதல்வர் ஜெயலலிதாவின் ஆர்.கே. நகர் தொகுதிக்கு உள்பட்ட தண்டையார்பேட்டை சென்னை துறைமுக விளையாட்டு அரங்கில் இந்த முகாமை நடத்துகின்றன.
முகாமை காலை 8 மணிக்கு அமைச்சர்கள் பி.பழனியப்பன், பி.மோகன், பா.வளர்மதி, எஸ்.கோகுல இந்திரா, எஸ்.அப்துல் ரஹீம், பி.வி.ரமணா, டி.கே.எம். சின்னையா ஆகியோர் தொடக்கி வைக்கின்றனர். பங்கேற்கும் முக்கிய நிறுவனங்கள்: டி.வி.எஸ். சுந்தரம், ஹூண்டாய், பிளக்ஸ்ட்ரானிக்ஸ், ரினால்ட் நிசான், ரானே, வீல்ஸ் இந்தியா, ஜே.கே.டயர், போர்டு இந்தியா, இன்போசிஸ் பிபி., ஐ.டி.சி. சென்னை உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் அரங்குகளை அமைத்துள்ளன. உணவுத் துறையில் சிறப்பிடம் பெற்று விளங்கும் சங்கீதா, தலப்பாகட்டி, அஞ்சப்பர் ஆகிய நிறுவனங்களும், ஜவுளி நிறுவனங்களான சென்னை சில்க்ஸ், நல்லி, ஆர்.எம்.கே.வி., போத்தீஸ் ஆகிய நிறுவனங்களும், நகை நிறுவனங்களான சரவணா கோல்டு ஸ்டோர்ஸ், ஜி.ஆர்.டி., பர்வீன் உள்ளிட்ட நிறுவனங்களும் காட்சி அரங்குகளை அமைத்துள்ளன. இவ்வாறாக 302 நிறுவனங்கள் காட்சி அரங்குகளை அமைத்துள்ளன. விண்ணப்பதாரர்களுக்கான வசதிகள்: மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் எட்டாம் வகுப்பு, பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், தொழில்கல்வி உள்ளிட்ட பல்வேறு படிப்புகளைப் பயின்றவர்களும் பங்கேற்கலாம். இவர்களுக்காக கூடுதல் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வெளியூர்களில் இருந்து வருபவர்களின் வசதிக்காக, சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், சுங்கச்சாவடி பேருந்து நிலையம், கிராஸ் சாலை சந்திப்பு பேருந்து நிறுத்தம் ஆகியவற்றில் வருவாய்த் துறையின் சார்பில் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முகாம் வளாகத்தில் குடிநீர், கழிவறைகள், காத்திருப்பு அறை உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. "5 சான்றிதழ்களை எடுத்து வர வேண்டும்' முகாமில் பங்கேற்க வருபவர்கள் 5 சான்றிதழ்களை எடுத்து வர வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வயதுச் சான்றிதழ் (மதிப்பெண் சான்றிதழ் அல்லது மாற்றுச் சான்றிதழ்), கல்வி அல்லது தொழில் நுட்ப படிப்புச் சான்றிதழ் (ஏதேனும் இருந்தால்), கடவுச்சீட்டு அளவுள்ள மூன்று புகைப்படங்கள், அனுபவச் சான்றிதழ்கள், தன்விவரக் குறிப்பு ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். சான்றிதழ்கள் ஏதேனும் இருந்தால் அவற்றின் அசலை எடுத்து வர வேண்டும். வாகனங்களை எங்கு நிறுத்தலாம்? முகாமில் பங்கேற்க வருபவர்கள் வாகனங்களை எங்கெங்கு நிறுத்த வேண்டும் என்ற விவரத்தை தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன் விவரம்: *திருவொற்றியூர் மார்க்கமாக வரும் வாகன ஓட்டிகள், கிராஸ் சாலையில் திரும்பி ஏ.இ. கோயில் சந்திப்பில் வலது புறமாகத் திரும்பி ராணி செட்டிகுளம் மைதானத்தில் நிறுத்திவிட்டு வரவேண்டும். *தண்டையார்பேட்டை மார்க்கமாக வரும் வாகன ஓட்டிகள் கிராஸ் சாலையில் திரும்பி ஏ.இ. கோயில் சந்திப்பில் வலது புறமாகத் திரும்பி ராணி செட்டிகுளம் மைதானத்தில் நிறுத்திவிட்டு வரவேண்டும். * வைத்தியநாதன் மேம்பாலம் மார்க்கமாக வரும் வாகன ஓட்டிகள் ஐ.டி.எச். கிராஸ் சந்திப்பில் இடதுபுறமாகத் திரும்பி டி.எச். சாலை கிராஸ் சாலை திரும்பி கோயில் சந்திப்பில் வலது புறமாகத் திரும்பி ராணி செட்டிகுளம் மைதானத்தில் நிறுத்திவிட்டு வரவேண்டும். *ரயில் மார்க்கமாக வருபவர்கள் வ.உ.சி.நகர் ரயில் நிலையத்தில் இறங்கி பெரியார் நகர் தெரு வழியாக அருகில் உள்ள முகாம் நடைபெறும் இடத்தை அடையலாம். *பேருந்து மூலமாக வருபவர்கள் திருவொற்றியூர் நெடுஞ்சாலை - கிராஸ் சாலை சந்திப்பில் இறங்கி கிராஸ் சாலை ஏ.ஏ. ஸ்கீம் சாலை வழியாக முகாம் நடைபெறும் இடத்தைச் சென்றடையலாம்.