வங்கிகளின் இணைய சேவைக்கு கட்டணம்

வங்கிகளின் இணைய சேவைக்கும், அக்., 1 முதல், கட்டணம் வசூலிப்பதுஅமலுக்கு வந்துள்ளது.வங்கிகளுக்கு சென்று, பண பரிவர்த்தனை செய்வதை குறைக்க, ஏ.டி.எம்., மற்றும் இணைய சேவைகள் உள்ளன. வங்கி கணக்கு வைத்துள்ள ஏ.டி.எம்., மூலம், ஐந்து முறை; பிற வங்கி ஏ.டி.எம்., மூலம், மூன்று முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம். 


இதற்கு மேல், ஏ.டி.எம்., சேவையை பயன்படுத்தும் ஒவ்வொரு முறைக்கும், 20 ரூபாய் சேவை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து, தற்போதுஇலவசமாக இருக்கும் வங்கிகளின் இணைய சேவைக்கும் கட்டணம் வசூலிக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, பணத்தின் அளவை கணக்கில் கொள்ளாமல், ஒவ்வொரு பண பரிமாற்றத்துக்கும், 2.50 ரூபாய் சேவை கட்டணமாக செலுத்த வேண்டும்.தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில்,'அக்., 1 முதல், வங்கி இணைய சேவைக்கு கட்டணம் வசூலிக்கும்படி, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது, பல வங்கிகளில் அமலுக்கு வந்து விட்டது' என்றார்.
அறிவிப்பு இல்லை:
தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் சங்கத் தலைவர் சடகோபன் கூறியதாவது:வங்கி இணைய சேவைக்கு கட்டணம் வசூலிப்பது பற்றி, எந்த முன் அறிவிப்பும் இல்லை. வங்கியின் இணையதளங்களிலும் இது பற்றி குறிப்பிடவில்லை. வங்கிக்கு செல்வோரின் எண்ணிக்கையை குறைப்பதோடு,எந்த நேரத்திலும் பண பரிவர்த்தனையை செய்யும் நோக்கில், ஏ.டி.எம்., மற்றும் இணைய சேவையை, வங்கிகள் தான் அறிமுகம் செய்தன.தற்போது அவற்றுக்கு சேவை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், சேவை கட்டணத்தை தவிர்க்க, காசோலைகளுடன் மீண்டும் வங்கிக்கு செல்லும் நிலை ஏற்படும். வங்கிகளின் நவீன சேவைகள், வாடிக்கையாளர் மீது கட்டண சுமையை ஏற்படுத்துகின்றன. நான் கணக்கு வைத்துள்ள இந்தியன் வங்கியில், இணையம் மூலம் செய்யும் பண பரிமாற்றத்துக்கு, சேவை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.