துணை தேர்தல் கமிஷனராக சந்தீப் சக்சேனா நியமனம் தமிழக புதிய தலைமை தேர்தல் அதிகாரி யார்?

சந்தீப் சக்சேனா துணை தேர்தல் கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்துக்கு ஓரிரு நாளில் புதிய தலைமை தேர்தல் அதிகாரி நியமிக்கப்படுகிறார்.


சந்தீப் சக்சேனா

தமிழகத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரியாக 27.10.14 அன்று சந்தீப் சக்சேனா பதவி ஏற்றார். தனது பணிக் காலத்தில் வாக்காளர் பட்டியலை மேம்படுத்தும் பணியில் பல்வேறு தொழில் நுட்பத்தை புகுத்திய பெருமை அவரைச் சாரும்.

அவர் மீது எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.

துணை தேர்தல் கமிஷனர்

இந்த நிலையில், சந்தீப் சக்சேனாவுக்கு பதவி உயர்வு அளிக்கும் வகையில் அவரை இந்திய தேர்தல் கமிஷனின் துணை கமிஷனராக நியமித்து உத்தரவிடப்பட்டது. இது தொடர்பான தகவல், மத்திய அரசின் பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் 17-வது அதிகாரியாக காட்டப்பட்டுள்ள சந்தீப் சக்சேனா, இந்திய தேர்தல் கமிஷனின் துணை கமிஷனராக 1.9.15 அன்றிலிருந்தே நியமிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

விடுவிப்பு உத்தரவு எப்போது?

ஆனால் அவரை விடுவித்து தமிழக அரசு இன்னும் உத்தரவு பிறப்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்திய தேர்தல் கமிஷனின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா செயல்பட்டாலும், தமிழக அரசிடம்தான் சம்பளம் மற்றும் பல்வேறு சலுகைகளை அவர் பெற்று வருகிறார். எனவே தமிழக அரசின் விடுவிப்பு உத்தரவு அவசியமாகிறது.

இதில் ஒரு முன்னோடி சம்பவம் தமிழகத்தில் சமீபத்தில் நடந்தது. தமிழகத்தின் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றிய அர்ச்சனா ராமசுந்தரத்தை சி.பி.ஐ.யின் உயர் அதிகாரியாக நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் மத்திய அரசு பணிக்கு செல்வதற்கு முன்பு தமிழக அரசின் விடுவிப்பு உத்தரவை அவர் பெறவில்லை. எனவே அவரை தமிழக அரசு இடைக்கால பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது.

3 பேர் பட்டியல்

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக அடுத்ததாக நியமிக்கப்பட 3 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பெயரை தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும். இதில் தமிழக சுற்றுலாத் துறை கமிஷனர் மற்றும் நிர்வாக இயக்குனரான ஹர் சகாய் மீனா இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

அந்த 3 பேரில் ஒருவரை தேர்வு செய்வதற்காக இந்திய தேர்தல் கமிஷனுக்கு தமிழக அரசு தனது பரிந்துரையை கடந்த 3 நாட்களுக்கு முன்பு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

புதிய தலைமை தேர்தல் அதிகாரி யார்?

இதில் ஒருவரை இந்திய தேர்தல் கமிஷன் தேர்வு செய்துவிட்டால், அவரே தமிழகத்தின் அடுத்த தலைமை தேர்தல் அதிகாரியாக இருப்பார். தமிழகத்தில் 2016-ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலை இறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மும்முரமாக இருப்பதால், விரைவில் அடுத்த தலைமை தேர்தல் அதிகாரி நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.

சந்தீப் சக்சேனாவை விடுவித்து தமிழக அரசு உத்தரவிட்டதும், அடுத்த தலைமைத் தேர்தல் அதிகாரியை தேர்வு செய்து இந்திய தேர்தல் கமிஷன் அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது. இதற்கான உத்தரவை ஓரிரு நாளில் எதிர்பார்க்கலாம் என்று தலைமைச் செயலக அதிகாரி ஒருவர் கூறினார்.

2 இடைத்தேர்தல்கள்

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சந்தீப் சக்சேனா 1966-ம் ஆண்டு ஏப்ரல் 2-ந் தேதி பிறந்தார். 1989-ம் ஆண்டு பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தேர்வானார். முதன் முதலாக தமிழகத்தில் சேலம் உதவி கலெக்டராக 1990-ம் ஆண்டு பதவி ஏற்றார்.

27.10.14 அன்று தலைமை தேர்தல் அதிகாரியாக பதவி ஏற்பதற்கு முன்பு, வேளாண்மைத் துறையின் முதன்மைச் செயலாளராக பணியாற்றி வந்தார்.

தமிழகத்தில் ஸ்ரீரங்கம், ஆர்.கே.நகர் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை சந்தீப் சக்சேனா நடத்தியுள்ளார்.