இளைஞர் எழுச்சி தின அறிவியல் போட்டியில் வினிதா முதலிடம்

பெரியகுளம்:முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த தினத்தையொட்டி, நடந்த இளைஞர் எழுச்சிதின அறிவியல் செய்முறை போட்டியில், பெரியகுளம் அரசு பள்ளி மாணவி வினிதா மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.தேனி மாவட்டம் பெரியகுளம் காந்திநகர் அரசு
உயர்நிலைப்பள்ளியின் 9 ம் வகுப்பு மாணவி ஆர்.வினிதா. இவர், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த தினமான இளைஞர் எழுச்சி நாளை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட வாரியாக நடந்த 'அறிவியல் செய்முறை' போட்டியில் பங்கேற்றார். தேனி மாவட்டத்தில் அக்.,13 ல் நடந்த இப்போட்டியில், 50 க்கும் அதிகமான பள்ளிகளில் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட அளவில் வினிதா உட்பட 3 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். சென்னையில் நடந்த மாநில போட்டியில் வினிதா பங்கேற்றார். அதில், அவர் கழிவுநீரை சுத்திகரித்து குடிநீராக மாற்றி முதலிடம் பெற்றார். அவரை பாராட்டி கல்வித்துறை அமைச்சர் வீரமணி கேடயம் வழங்கினார்.
மாணவி வினிதா கூறுகையில், “பள்ளியில் தினமும் காலையில் 'தினமலர்' நாளிதழில் வரும் முக்கிய செய்திகளை குறித்துக்கொண்டு வந்து இறை வணக்கம் முடிந்ததும் வாசிப்பேன். குறிப்பாக, தினமலர் நாளிதழில் வரும் அறிவியல் கட்டுரைகளை வாசித்து, மனதில் பதியம் போட்டேன். இது அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற உதவியாக இருந்தது. பள்ளி தலைமையாசிரியர் செல்வி, உதவி தலைமையாசிரியை பாலநந்தினி ஆகியோர் ஒத்துழைப்பால், இந்த விருது எனக்கு கிடைத்தது. இந்த சாதனையை எனது தந்தை ராஜா, தாய் தாயம்மாவிற்கு சமர்ப்பிக்கிறேன்,” என்றார்.--