கலந்தாய்வில் காலியிடங்கள் மறைப்பு பட்டதாரி ஆசிரியர்கள் புகார்

சிவகங்கை:சிவகங்கையில் நடந்த பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வில், காலியிடங்கள் மறைக்கப்பட்டதாக ஆசிரியர் சங்கத்தினர் குற்றம்சாட்டினர்.

சிவகங்கையில் உள் மாவட்டத்திற்கான மாறுதல் கலந்தாய்வு நேற்று நடந்தது. முதன்மைக் கல்வி செந்திவேல்முருகன் உள்ளிட்ட அலுவலர்கள் நடத்தினர். வரலாறு பாடத்திற்கான காலியிடங்களை முன்கூட்டியே அறிவிப்பு பலகையில் வெளியிட ஆசிரியர்கள் வலியுறுத்தினர். 'கலந்தாய்வு நடக்கும் அறைக்குள் மட்டுமே அதை வெளியிட முடியும்' என அதிகாரிகள் கூறினர். இதை கண்டித்து ஆசிரியர்கள் கோஷமிட்டனர். பின், ஒவ்வொரு பாடத்திற்கும் கலந்தாய்வு துவங்கும் முன் காலியிடம் விவரம் அறிவிக்கப்பட்டது.ஆனால் காலி இடங்கள் மறைக்கப்பட்டதாக பட்டதாரி ஆசிரியர் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கழகத்தினர் தெரிவித்தனர்.பாடவாரியாக அனைத்து காலியிடங்களையும் மூன்று நாட்களுக்கு முன் அறிவிக்கவில்லை. கணிதத்தில் 15 இடத்தில் 9ம், தமிழில் 10ல் 6ம், சமூக அறிவியலில் 19ல் 10ம், வரலாறு, அறிவியலில் ஒருசில இடங்களும் மறைக்கப்பட்டன. இவற்றை நம்பி வந்த ஆசிரியர்கள் ஏமாந்தனர்.
'பணி நிரவலில் மாறுதலாகி சென்ற ஆசிரியர்கள், கலந்தாய்வில் பங்கேற்க முடியாது' என முதலில் கூறினர். பிறகு, 'அவர்களும் பங்கேற்கலாம்' என்றனர். இது, குளறுபடியை ஏற்படுத்தியது, என்றனர்.அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இயக்குனர் அலுவலக வழிகாட்டுதலின்படி கலந்தாய்வு நடந்தது. காலியிடங்களை மறைக்கவில்லை' என்றனர்.