வடகிழக்கு பருவமழை நாளை துவக்கம்!

தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழை நாளை துவங்குகிறது. நடப்பாண்டில், தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை, ஒரு வாரம் தாமதமாக துவங்குகிறது.

தற்போது பருவமழைக்கான அறிகுறிகள் வலுவடைந்துள்ளன. 'வங்கக்கடலின் தென்மேற்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால், நாளை முதல், 30ம் தேதி வரை கன மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.'சென்னையில், நாளை ஒரே நாளில், 30 செ.மீ., மழை பெய்யும்; முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என, சென்னை மாநகராட்சி சுகாதார அதிகாரி பெயரில், 'வாட்ஸ் ஆப்'பில், நேற்று உலா வந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நேரம், நாளை நடக்க இருந்த சென்னை மாநகராட்சி கூட்டமும், ஒரு நாள் முன்னதாக இன்று நடத்தப்படுகிறது.

இதுகுறித்து, மாநராட்சி சுகாதார அலுவலர் கண்ணன் கூறுகையில், ''நாளை, 30 செ.மீ., மழை பெய்யும் என, வானிலை மையம் அறிவித்த தகவலை தான், ஊழியர்களுக்கு தெரிவித்து, உஷாராக இருக்க அறிவுறுத்தியுள்ளோம்,'' என்றார்.அதன்பின், ''கன மழை பெய்யும் என்று தான் எச்சரித்துள்ளோம். எவ்வளவு மழை பெய்யும் என்பதை, வானிலை ஆய்வு மையம் தான் கூற வேண்டும்,'' என, மழுப்பினார்.

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறுகையில், ''இலங்கை அருகே, வங்கக் கடலின் தென் மேற்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. புதன்கிழமை, தமிழகம் அருகே வந்துவிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. நாளை முதல் கன மழைக்கு வாய்ப்பு உண்டு. இதேபோல், மதுரை, திருச்சி பகுதிகளிலும் மழை பெய்யலாம்,'' என்றார்.

ஒரே நாளில், 30 செ.மீ., மழை பெய்யும் என்ற தகவல் குறித்து கேட்டபோது, 'கன மழை பெய்யும்; எனினும், 30 செ.மீ., மழை, ஒரே நாளில் பெய்ய வாய்ப்பில்லை' என, வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


எச்சரிக்கை:

'வங்கக் கடலின் தென் மேற்கு பகுதியில், கடல் மட்டத்தில் இருந்து, 4.5 கி.மீ., உயரத்தில், புயல் சுழற்சி ஏற்பட்டு உள்ளது. இது வலுவடைந்தால், நாளை முதல், 30ம் தேதி வரை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. எனவே, கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும், தமிழக கடலோர மாவட்ட மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை துவங்கும் பருவ மழை, டிசம்பர் வரை பெய்யும் என, தெரிகிறது.

பள்ளிகளுக்கு விடுமுறை?

கன மழை காரணமாக, நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, 'வானிலை நிலவரத்துக்கேற்ப அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் விடுமுறை குறித்து முடிவு செய்வர்' என்றனர்.