அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆங்கிலம் பேச பயிற்சி

அரசு பள்ளி மாணவர்கள், தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றாலும், ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியாததால், வேலைக்கான நேர்முக தேர்வில் பங்கேற்று பதில் சொல்வது, பொது இடங்களில் ஆங்கிலத்தில் பேசுவது
போன்றவற்றில் பிரச்னைகளைச் சந்திக்கின்றனர். இந்த நிலையை மாற்ற, தமிழக பள்ளிக்கல்வித்துறை பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி மற்றும் உச்சரிப்பு பயிற்சி போன்றவை, பிரிட்டிஷ் கவுன்சில் மூலமாக தரப்படுகின்றன. அடுத்த கட்டமாக, பெங்களூரில் உள்ள தென்னிந்திய ஆங்கில பயிற்சி மண்டல மையத்தில், ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சு திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
நவ., 2 முதல் டிச., 1 வரை, ஒரு மாதம் பயிற்சி தரப்படுகிறது. 1 முதல், 5ம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளில் இருந்து, தமிழகம் முழுவதும், 150 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, இந்த பயிற்சிக்கு அனுப்பப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.