அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 6 சதவீதம் உயர்வு

சென்னை,:அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.


அவரது அறிக்கை: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி ஜூலை 1ம் தேதி முதல் 6 சதவீதம் உயர்த்தி வழங்கப்பட்டு உள்ளது.அதேபோல, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி ஜூலை 1 முதல் 6 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு 366 ரூபாய் முதல் 4,620 ரூபாய் வரை சம்பள உயர்வு; ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 183 ரூபாய் முதல் 2,310 ரூபாய் வரை உயர்வு கிடைக்கும்.அகவிலைப்படி உயர்வு ஜூலை 1 முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும். இதனால் 18 லட்சம் பேர் பயன்பெறுவர்; ஆண்டுக்கு 1,501 கோடி ரூபாய் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும்.இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.


தொகுப்பூதியம் பெறுவோருக்கு...:

'தொகுப்பூதியம் மற்றும் மதிப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கும், தனிப்பட்ட தொகை உயர்த்தி வழங்கப்படும்' என அரசு அறிவித்துள்ளது. இதற்கான அரசாணையை நிதித்துறை அரசு செயலர் சண்முகம் பிறப்பித்துள்ளார்.அதன் விவரம்: அரசு ஊழியர்களைப் போலவே மாதத்திற்கு, 600 ரூபாய் வரை திருத்தப்பட்ட தொகுப்பூதியம், நிலையான ஊதியம், மதிப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கு, தனிப்பட்ட தொகையாக மாதம் 20 ரூபாய்; 600 ரூபாய்க்கு மேல் பெறும் பணியாளர்களுக்கு 40 ரூபாய் ஜூலை 1 முதல் இருந்து உயர்த்தி வழங்கப்படும். ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பருக்கான தனிப்பட்ட தொகை உடனடியாக ரொக்கமாக வழங்கப்படும்.