40 சதவீத காலிப்பணியிடங்களால் புள்ளியியல் துறை பணிகளில் சிக்கல் : மன உளைச்சலில் ஊழியர்கள்

திண்டுக்கல்:தமிழக புள்ளியியல் துறையில் 60 சதவீத காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் புள்ளி விபரங்கள் சேகரிப்பதில் சிக்கல் நீடித்துவருகிறது என, புள்ளியியல்துறை ஊழியர்கள்
புலம்புகின்றனர்.தமிழகத்தில் 385 புள்ளியியல் துறை வட்டார அலுவலகங்கள் செயல்படுகின்றன. மாவட்டந்தோறும் துணை இயக்குனர்கள், 3 உதவி புள்ளியியல் அலுவலர்கள், ஆய்வாளர்கள், வட்டார புள்ளியியல் ஆய்வாளர்கள் பணியில் ஈடுபடுகின்றனர்.
இதுதவிர வட்டாரங்கள் கணக்கிடப்பட்டு மண்டலளவில் புள்ளியியல் உதவி இயக்குனர்கள் பணிகளை மேற்பார்வையிடுகின்றனர். வேளாண், தோட்டக்கலை, பயிர் பாதுகாப்பு, பயிர்களின் வளர்ச்சி, உள்ளாட்சி வளர்ச்சி குறித்த புள்ளியியல் விபரங்களை சேகரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.இந்த அலுவலகங்களில் தற்போது 40 சதவீத காலிப்பணியிடங்களும், பதவி உயர்வு பெற்ற உதவி இயக்குனர் காலிப் பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால் பணியாளர்கள் அதிக பணிச்சுமையிலும், மன உளைச்சலிலும் பணி
புரியும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எந்த பணியையும் முழுமையாக, குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்ய இயலவில்லை. அரசு உரிய நேரத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், என ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர்.
புள்ளியியல்துறை மூத்த ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், “மூன்று ஆய்வாளர்கள் செய்யவேண்டிய பணியை ஒருவர் செய்வதால், பணிச்சுமை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. பதவி உயர்வு பெறும் உதவி இயக்குனர் பணியிடங்களும் அதிகளவில் நிரப்பப்படாமல் உள்ளன. அரசு விரைவில் காலிப் பணியிடங்கள் நிரப்ப முன் வர வேண்டும், என்றார்.