பல துறைகளில் சிறந்து விளங்கிய 30 பேருக்கு அப்துல் கலாம் விருது: ஆளுநர் ரோசய்யா வழங்கினார்

சென்னையில் நடைபெற்ற விழா வில் பல்வேறு துறைகளில் பங்காற் றியவர்களுக்கான அப்துல் கலாம் பெயரிலான விருதுகளை ஆளுநர் கே.ரோசய்யா வழங்கினார்.
பெங்களூர் சர்வதேச ஒருமைப் பாடு, அமைதி மற்றும் நட்பு சங்கத்தின் (international Integrity peace & friendship Society Bangalore) சார்பில், பல்வேறு துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் ஆளுநர் ரோசய்யா பங்கேற்று, 30
பேருக்கு ‘பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் எக்ஸெலன்ஸ் அவார்டு’ என்ற விருதை வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது: இந்தியா உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றாகும். அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஒரு சின்னமாக கொண்டுள்ளது. இதற்கு எதிராக பயங்கரவாதம் தனது கோர முகத்தை காட்டுவது சகித்துக் கொள்ளக் கூடியதாக இல்லை.
எந்த மதமும் பயங்கரவாதத்தை உபதேசிக்கவில்லை. நாம் பின்பற்றும் மதங்கள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் சென்று சேரும் பாதை ஒன்றுதான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். மறைந்த ஏ.பி.ஜே.அப்துல் கலாம் உன்னத எண்ணங்களால், இளம் தலைமுறையினரிடையே தன்னம்பிக்கை, நாட்டுப்பற்றை வளர்த்தார். நமது முன்னோர்கள் காட்டிய வழியில் ஒற்றுமை, அமைதி, நல்லிணக்கம் ஆகிவற்றை அடைவதற்கு உள்ள தடைகளை கடந்து வெற்றி பெற வேண்டும்.
இவ்வாறு ரோசய்யா பேசினார்.
விழாவில் சென்னை உயர் நீதிமன்ற லோக் அதாலத் நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் தொழிலதிபர் ஜி.மணிலால், கர்நாடக - தெலுங்கு அகாடமி தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.