சம்பளத்தில் ரூ.20 லட்சம் பிடித்தம்போராட கருவூல துறையினர் தயார்

ஊதியத்தில் ரூ.20 லட்சம் பிடித்தம் செய்வதை கண்டித்து, கருவூல கணக்குத்துறை ஊழியர்கள் மீண்டும் போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

சென்னையில் அக்., 1 ல் கருவூலத்துறை இயக்குனர் ஆய்வு கூட்டத்தில் மதுரை மாவட்ட கூடுதல் கருவூல அலுவலர் மூர்த்தி இறந்தார். இதற்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கருவூல இயக்குனரை இடமாற்றம் செய்ய வேண்டும். மனஉளைச்சலால் இறந்த மாவட்ட கருவூல அலுவலர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கருவூல கணக்குத்துறை ஊழியர்கள் அக்., 6 ல் தற்செயல் விடுப்பு எடுத்தனர்.
மேலும் இப்பிரச்னை குறித்து நிதி அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் பேச கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்கத்தினர் பலமுறை முயற்சித்தும் பலனில்லை. பிரச்னைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் விரைவில் போராட்டம் அறிவிக்கப்படும் என, சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். நேற்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, இறந்த மூர்த்தியின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்தார். மற்ற 
கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்கத்தினர் அக்., 31ல் திருச்சியில் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க உள்ளனர்.
சங்க நிர்வாகிகள் கூறியதாவது: நிவாரணம் வழங்கியதற்காக தமிழக முதல்வரை பாராட்டுகிறோம். அக்.,6 ல் தற்செயல் விடுப்பு போராட்டம் எடுத்த 3 ஆயிரம் பேரின் ஒரு நாள் ஊதியம் ரூ.20 லட்சம் வரை பிடித்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. முக்கிய கோரிக்கையான இயக்குனரை மாற்றுவது குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் மீண்டும் போராட்டம் 
நடத்துவதை தவிர வேறுவழியில்லை, என்றனர்.