கலந்தாய்வில் 1.20 லட்சம் இடங்கள் காலி எதிரொலி: தமிழகத்தில் விற்பனைக்குத் தயாராகும் தனியார் பொறியியல் கல்லூரிகள்

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் உள்ள 58 சதவீத இடங்கள் மட்டுமே கலந்தாய்வு மூலம் நிரம்பியுள்ளன. 1.20 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன. இதன் எதிரொலியாக பல பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்காக பேரம் பேசப்படும் நிலை உருவாகியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் என தமிழகத்தில் 583 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் பிஇ, பிடெக், பிஆர்க் படிப்புகளில் மொத்தம் 2 லட்சத்து 89 ஆயிரத்து 939 இடங்கள் இருக்கின்றன.
நடப்புக் கல்வி ஆண்டில் கலந்தாய்வு, தனியார் சுயநிதி கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக் கான மாணவர் சேர்க்கை முடிந்து, முதலாண்டு மாணவர்களுக்கு வகுப்புகளும் தொடங்கிவிட்டன. இந்த சூழலில், மொத்தம் உள்ள 2.89 லட்சம் இடங்களில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 680 இடங்கள் (58 சதவீதம்) மட்டுமே நிரம்பியுள்ளன. எஞ்சிய 1 லட்சத்து 20 ஆயிரத்து 259 இடங்கள் (42 சதவீதம்) காலியாக உள்ளன. இதில் தனியார் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களும் அடங்கும்.
தமிழகத்தில் உள்ள 553 தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் மொத்தம் 2 லட்சத்து 74 ஆயிரத்து 739 இடங்களில், 1 லட்சத்து 57ஆயிரத்து 45 மாணவர் சேர்க்கை நடைபெற்றதுள்ளது. தமிழக அளவில் மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் பொறியியல் படிப்பில் 16.90 லட்சம் இடங்கள் காலியாக இருப்பதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அறிவித்துள்ளது. எனவே பொறியியல் இடங்களை 6 லட்சம் அளவுக்கு குறைக்கவும் ஏஐசிடிஇ திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக பொறியியல் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற முதல்வர் அரங்கராஜன் என்பவர் கூறும்போது, “பொறியி யல் கல்லூரிகள் அதிகமுள்ள கொங்கு மண்டலத்திலும், காஞ்சிபுரம் பகுதியிலும் பல கல்லூரிகளை பெரிய கல்வி நிறுவனங்கள் மறைமுகமாக பேரம் பேசுவது உண்மைதான். ஒரு கல்வி நிறுவனம் ரூ.30 கோடியிலிருந்து ரூ.100 கோடி வரை விலை பேசப்படுகிறது. இருப்பினும் விற்பனைக்குள்ள கல்லூரிகளை வாங்குவதற்கும் குறைந்த அளவிலான ஆட்களே முன் வருகிறார்கள்.
அதிகரிக்கும் நிர்வாக செல வுகள், பொறியியல் துறையில் வேலை வாய்ப்புகள் குறைந்தது, தமிழகத்தில் போதுமான தொழிற்சாலைகள் இல்லாதது, பெரும்பாலான தனியார் கல்லூரி களில் தகுதியற்ற பேராசிரியர்கள் நியமனம், உள்கட்டமைப்பு வசதி குறைவு, தேர்ச்சி விகிதம் குறைவு, ஆங்கிலத் திறன் குறைவினால் மாணவர்களின் இடைநிற்றல் மற்றும் பெருமளவு சரிந்துவிட்ட மாணவர் சேர்க்கை போன்றவை கல்லூரிகளின் விற்பனைக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக மக்கள் தொகையைக் கணக்கி டாமல் புற்றீசல் போல் பொறி யியல் கல்லூரிகள் தொடங்கப் பட்டுவிட்டதுதான் தற்போதைய நிலைக்குக் காரணம்.
முன்பெல்லாம் நல்ல கல்லூரி எது என்று மாணவர்களும் பெற்றோர்களும் தேடி அலைந்து கல்லூரிகளில் இடம் பிடிப்பர். ஆனால் தற்போது மாணவரை தேடி கல்வி நிறுவனங்கள் அவர்களது வீடு தேடிவரும் நிலை உள்ளது. பொறியியல் கல்வி நிறுவனத்தை நடத்துவதற்கான விதிமுறைகளை ஏஐசிடிஇ கடுமையாக்கியிருப்பதால் பல கல்லூரிகள் மூடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
விற்பனைக்கு வரும் பல கல்லூரிகளை பேரம் பேசும் கல்வி நிறுவனங்கள், அத்தகைய கல்லூரிகளை கலைக் கல்லூரி களாகவும், 2 வருட படிப்பைக் கொண்ட வேளாண் கல்லூரிக ளாகவும், கால்நடை மருத்துவக் கல்லூரிகளாகவும் மாற்றி நடத்த ஆயத்தமாகி வருகின்றன என்றார்.