தீபாவளி நெரிசல்:12 சிறப்பு ரயில்கள்

சென்னை, :''தீபாவளியை முன்னிட்டு, நாகர்கோவில், கரூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு, 12 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்,'' என,தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து,
சென்னையில் நேற்று அவர் கூறியதாவது:தீபாவளியை முன்னிட்டு, 12 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்; தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
பண்டிகை காலங்களில், கூட்டத்தை சமாளிக்க, ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பது வழக்கம். தீபாவளிக்கும், முக்கிய ரயில்களில், கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும். ரயில்களில், பட்டாசு எடுத்து சென்றால், கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.சென்னையில் நேற்று, தெற்கு ரயில்வே சார்பில், நவீன சிக்னல் தொழில்நுட்ப திறன் மற்றும் பாதுகாப்பு முறை தொடர்பான கருத்தரங்கம் நடந்தது.
அதில், ரயில்வே வாரிய கூடுதல் உறுப்பினர் (சிக்னல்) மனோகரன் பேசியதாவது:
ரயில்வேயில், சிக்னல் மற்றும் தொழில்நுட்ப துறையின் பங்கு, இதயமும், நரம்பும் போன்றது. தெற்கு ரயில்வேயில், நவீன சிக்னல் தொழில்நுட்பம் செயல்பாட்டில் உள்ளது. சென்னை, புறநகர் மின்சார ரயில்கள் இயக்கத்தில்,தானியங்கி சிக்னல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.ரயில்கள் நேருக்கு நேர் மோதுவதை தவிர்க்க, சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில், எச்சரிக்கை கருவி பொருத்தப்பட்டு, சோதனை வெற்றிகரமாக முடிந்தது. நாட்டில் முதன் முறையாக, தெற்கு ரயில்வேயில் தான் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில், ரயில்வே துறையும், மத்திய அரசும் தயக்கம் காட்டவில்லை. திட்டங்களை செயல்படுத்தும் திறன் இருந்தால் போதும்; நிதி ஒதுக்குவதில், எந்த சிக்கலும் இல்லை.இவ்வாறு அவர் பேசினார்.