மருத்துவ சேர்க்கையில் மோசடி; சி.பி.சி.ஐ.டி.,விசாரணை துவக்கம்

சுயநிதி தனியார் மருத்துவக் கல்லுாரி நிர்வாக ஒதுக்கீடு மாணவர்  சேர்க்கையில் இணைய தளத்தில் வெளியான போலி தேர்ச்சி பட்டியலை காட்டி மோசடி செய்தது அம்பலமாகி உள்ளது. 

            இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி புகார் தெரிவித்ததையடுத்து கோப்புகளை துாசி தட்டி சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். தனியார் மருத்துவம், பொறியியல் கல்லுாரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடப்பதை கண்காணிக்க சுப்ரீம் கோர்ட் விதிமுறைகளை விதித்துள்ளது. இதில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தனியார் மருத்துவம், பொறியியல் கல்லுாரிகள், நுழைவு தேர்வு நடத்தி வினாத் தாள்களை திருத்தி, இணையதளத்தில் பகிரங்கமாக வெளியிட வேண்டும். மாணவர்களிடம் நன்கொடை கேட்கக் கூடாது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனியார் கல்லுாரிகளின் நுழைவு தேர்வை கண்காணிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் தலைமையில் கமிட்டி அமைக்கப் பட்டது. இதில் கல்வி, சுகாதார துறை செயலாளர், உயர் கல்வி இயக்குனர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்தாண்டு சுயநிதி கல்லுாரிகள் நிர்வாக ஒதுக்கீட்டிற்காக நடந்த மாணவர் சேர்க்கை நுழைவு தேர்வில், பல முறைகேடுகள் நடந்தது அதிர்ச்சியடைய செய்துள்ளது. தமிழ்நாடு, திருவாரூர் மாவட்டம் குடவாசல் அடுத்த பெரும் பண்ணையூர் சாலைக்கார தெரு கண்ணபிரான் மகள் ரேஷ்மா, சென்னை மகாலிங்கபுரம் பிரவுன் ஸ்டோன் பிரசன்னா, சகோதரி மகள் அபர்னா ஆகியோர், புதுச்சேரியில் ஒரு தனியார் மருத்துவக் கல்லுாரியில் சேர விண்ணப்பித்து, நுழைவு தேர்வு எழுதி, வெற்றிப் பெற்றனர். கல்லுாரியில் சேர பணத்தை திரட்டிய நிலையில் இணைய தளத்தில் வெளியான வேறு பட்டியலை காட்டி சீட் கொடுக்க, கல்லுாரி நிர்வாகத்தினர் மறுத்தனர். பின், கூடுதலாக நன்கொடை கேட்டனர். பாதித்த இருவரும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுக பெருமாள் ஆதித்தனிடம் புகார் அளித்தனர். தனியார் மருத்துவக் கல்லுாரிகளிடம் விசாரித்த போது, நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை போலி ஆவணங்களை தயார் செய்து, சீட் மறுத்திருப்பது தெரிய வந்தது.இது குறித்து கண்காணிப்பு கமிட்டி பல முறை விளக்கம் கேட்டும் தனியார் கல்லுாரிகள் பதில் தெரிவிக்கவில்லை. இறுதியாக கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி எச்சரிக்கை கடிதம் அனுப்பியும் பதிலளிக்கவில்லை. இதனையடுத்து மாணவர்களை ஏமாற்றிய தனியார் கல்லுாரி நிர்வாகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரசுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுக பெருமாள் ஆதித்தன் பரிந்துரை செய்திருந்தார். இதன்படி ஒரு மாதத்திற்கு பின், தற்போது சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்து விசாரணையை துவக்கியுள்ளனர். இதனால் சுயநிதி கல்லுாரி மாணவர் சேர்க்கையில் நடந்த பல மோசடிகள் அம்பலமாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. நுழைவு தேர்வில் மாணவி ரேஷ்மா 83வது இடத்தை பெற்றார். அவரால் பணத்தை திரட்ட முடியவில்லை. கால அவகாசம் கேட்ட போது, தேர்ச்சி பட்டியல் மாறியது. நுழைவு தேர்வில் ரேஷ்மா 306வது இடத்தை பெற்றார் என்று சீட் கை விரிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு அழைப்பு கடிதம் அனுப்பாமல், அவருக்கு கலந்தாய்வில் ஆப்சென்ட் போடப்பட்டுள்ளது. மற்றொரு மாணவிக்கு மருத்துவ சீட் விலை பேசி விற்கப்பட்டுள்ளது. இதேபோல் மாணவி அபர்ணா நுழைவு தேர்வில் 177வது இடத்தை பிடித்தார். பணத்தை கட்ட முடியாத போது 257வது இடத்தில் இருந்தவர் தவறுதலாக 177 வது இடத்தில் இடம் பெற்றதாக கூறி, சீட் மறுக்கப்பட்டுள்ளது மேலும் இணைய தளத்தில் போலி தேர்ச்சி பட்டியலை வெளியிட்டு, மாணவிகளின் எதிர் காலத்தோடு விளையாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.