வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கையை உயர்த்த முடிவுதுணை ஆணையர் ஸ்ரீதரன் தகவல்

காரைக்குடி:“வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை 4 கோடியாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என வருமான வரித்துறை துணை ஆணையர்

(புலனாய்வு) ஸ்ரீதரன் கூறினார்.காரைக்குடி அழகப்பா பல்கலையில் போட்டி தேர்வுமாணவர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கில் அவர் பேசியதாவது: விடா முயற்சியே போட்டி தேர்வில் வெற்றி பெற சிறந்த வழி. நான் மூன்று முறை முதல் நிலை தேர்வில் தோல்வியடைந்தேன். நான்காம் முறை ஐ.பி.எஸ்., தேர்வானேன். மேற்கு வங்கத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததால் அதில் சேராமல் தொடர்ந்து முயற்சி செய்து 2010-ல் ஐ.ஆர்.எஸ்.,-க்கு தேர்வானேன். ஒரு முறை தோற்றால் சோர்ந்து விடக்கூடாது. தன்னம்பிக்கை வேண்டும்.
வருமான வரி ஏய்ப்பு நடந்து கொண்டு தான் இருக்கிறது. மக்கள் செலுத்தும் வரி நாட்டின் வளர்ச்சிக்கு உதவுகிறது. தமிழகத்தில் கடந்த 2014--15-ல் ஆயிரம் கோடிக்கு வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டு ரூ.300 கோடி வரை வரியாக வசூலிக்கப்
பட்டுள்ளது.இந்தியா முழுவதும் இந்த ஆண்டு ரூ.8 லட்சம் கோடிக்கு வரி வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது 2.5 கோடி பேர் மட்டுமே வருமான வரி செலுத்துபவர்களாக உள்ளனர். இவர்களின் எண்ணிக்கையை 4 கோடியாக உயர்த்தும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.போட்டி தேர்வில் வெற்றி பெறுபவர்கள் நேர்மையாக பணியாற்ற வேண்டும். ஊழல் என்பது நம்முடைய கலாசாரமாக மாறி விட்டது. பெற்றோர் பிள்ளைகளுக்கு ஊழலற்ற நிர்வாகத்தை சொல்லி கொடுக்க வேண்டும், என்றார்.
நிகழ்ச்சியில் பல்கலை துணைவேந்தர் சுப்பையா, பதிவாளர் மாணிக்கவாசகம், பேராசிரியர்கள் மணிசங்கர், நாராயணமூர்த்தி, பாலகிருஷ்ணன், அழகப்பா பல்கலை கல்வி வட்ட இயக்குனர் சுரேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.-