வெப் வாட்ஸ்அப் பயன்படுத்தினால் கம்ப்யூட்டர் முடக்கப்படும் அபாயம்

புதுடெல்லி:  ஸ்மார்ட் போன்களில் அதிகம் பயன்படுத்தப்படும் ஆப்களில் மிக முக்கியமானது வாட்ஸ்அப். சாட்டிங், வீடியோ, புகைப்படங்களை பகிர்ந்து  கொள்ளுதல் மட்டுமின்றி குரல் அழைப்புகள் மேற்கொள்ளவும் வாட்ஸ்அப் பயன்படுத்தப்படுகிறது. கம்ப்யூட்டரில் பார்க்க வசதியாக
வெப் வாட்ஸ்அப்  அறிமுகம் செய்யப்பட்டது.  வெப் வாட்ஸ்அப் மூலம் மட்டும் சுமார் 20 கோடி பேர் வாட்ஸ் அப் பார்க்கின்றனர். இவ்வாறு பயன்படுத்துவோரின்  கம்ப்யூட்டர்கள் முடக்கப்படுவதாக வைரஸ் செக்யூரிட்டி நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஒரு மொபைலில் இருந்து மற்றொரு மொபைல்  போனுக்கு விகார்டு முறையில் போன் நம்பர் அனுப்பலாம். இதுபோன்றே வெப் வாட்ஸ் அப் மூலம் சாட்டிங் செய்பவர்களுக்கு கம்ப்யூட்டர் ஹேக்கிங்  செய்பவர்கள் விகார்டு அனுப்புகிறார்கள்.
உண்மையில் இது கம்ப்யூட்டர் ஹேக்கிங் செய்வதற்கான இஎக்ஸ்இ பைலாக இருக்கும். வாட்ஸ்அப் வெப்பில் இந்த விகார்டை ஏற்று திறந்து  பார்ப்பவர்களின் கம்ப்யூட்டர் சீர்குலைக்கப்பட்டு முடக்கப்படுகிறது என்று வைரஸ் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப் நிறுவனத்தினர்  இதற்கான முதற்கட்ட தீர்வை கண்டறிந்துள்ளனர். இருப்பினும், மொபைலில் உள்ள வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்வதோடு, தெரியாத நபர்கள்  அனுப்பும் தகவல்கள், பைல்களை கவனமுடன் கையாளுமாறு வைரஸ் செக்யூரிட்டி நிறுவனம் எச்சரித்துள்ளது.