எம்.பி.பி.எஸ்., 'சீட்' கிடைத்தும் நெசவு தொழிலாளி மகள் தவிப்பு

சேலம் : சென்னை அரசு மருத்துவக் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., 'சீட்' கிடைத்தும், கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் செலுத்த முடியாமல், நெசவுத் தொழிலாளியின் மகள் தவிக்கிறார்.

சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அடுத்த, நரியம்பட்டியை சேர்ந்த நெசவுத் தொழிலாளி முருகேசன் மகள் கவிதா. இவர், 6ம் வகுப்பிலிருந்து, 10ம் வகுப்பு வரை, ஜலகண்டாபுரம் அரசு பள்ளியில் படித்தார். 10ம் வகுப்பு தேர்வில், 480 மதிப்பெண் பெற்றார்.இதனால், மேட்டூரிலுள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 1, பிளஸ் 2 படிப்பை இலவசமாக வழங்கியது. கடந்த, கல்வியாண்டில், பிளஸ் 2 தேர்வில், கவிதா, 1,176 மதிப்பெண் பெற்றார்.இவரது, 'கட்- ஆப்' 198.75 என்பதால், சென்னை அரசு மருத்துவக் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., 'சீட்' கிடைத்தது. மகிழ்சியடைந்த பெற்றோர், கல்விக்கட்டணம், விடுதிக்கட்டணம் என, ஆண்டுக்கு, 70 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்றதும் அதிர்ச்சி அடைந்தனர்.

முருகேசன், வட்டிக்கு கடன் வாங்கி, முதற்கட்டமாக கல்வி கட்டணத்தை செலுத்தி, மகளை, மருத்துவக் கல்லுாரியில் சேர்த்து விட்டார். ஆனால், படிப்பை முடிப்பதற்கு, சில லட்சம் ரூபாய் வரை தேவைப்படும் என்பதால், என்ன செய்வது என தெரியாமல், மாணவி முழித்து வருகிறார்.

மாணவி கவிதா கூறியதாவது:பெற்றோர், நெசவுத்தொழில் செய்து, என்னை படிக்க வைக்கின்றனர். என் தம்பிகள் இருவரில், ஒருவன், பிளஸ் 1ம், மற்றொருவன், 9ம் வகுப்பும் படிக்கின்றனர். பெற்றோர் சம்பாத்தியம், குடும்ப செலவுக்கே போதுமானதாக இருப்பதால், என் படிப்புக்கான பணத்தை ஏற்பாடு செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.வங்கியில், கல்விக்கடனும் தரமறுத்து விட்டதால், கட்டணம் செலுத்தி, ஐந்தாண்டு மருத்துவப் படிப்பை எப்படி தொடர்வது என்றே தெரியவில்லை. தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், என் குடும்ப நிலையை உணந்து, படிப்புக்கு உதவி செய்ய வேண்டும்.கொடை உள்ளம் படைத்தவர்கள், என் தந்தையின் மொபைல் எண், 91501 48076ல் தொடர்பு கொண்டு உதவ வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.