'டெங்கு' காய்ச்சலில் பணம் பார்க்காதீங்க: தனியார் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை

டெங்கு, வைரஸ் காய்ச்சலுடன் வருவோருக்கு, உரிய சிகிச்சை அளிக்க முடியாவிட்டால், ஆரம்ப நிலையிலேயே, அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி விடுங்கள். முடிந்த வரை பணம் வசூலித்து விட்டு, கடைசி நேரத்தில் அனுப்பும் நடைமுறையை, தனியார் மருத்துவமனைகள் கைவிட வேண்டும்' என, தமிழக அரசு எச்சரித்துள்ளது.

சென்னை ஆவடியைச் சேர்ந்த மோனகபிரசாத் மகனான, பிளஸ் 1 மாணவன் ரூபேஷ், 15; தாம்பரம் முடிச்சூரைச் சேர்ந்த ரமேஷின் மனைவி லில்லிமா, 39, என்ற இருவர், கடந்த நான்கு நாட்களில், டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். இது, மக்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.இருவரும் காய்ச்சலால் இறந்ததை உறுதிப்படுத்தியுள்ள, சென்னை அரசு பொது மருத்துவமனை டாக்டர்கள், 'தனியார் மருத்துவமனைகள் கைவிரித்த நிலையில், கடைசி கட்டத்தில் தான் இங்கு அனுப்பப்பட்டனர். உடல் உறுப்புக்கள் பல செயல் இழந்த நிலையில் வந்ததால், வந்த சில மணி நேரங்களில் இறந்து விட்டனர்' என்றனர்.இந்நிலையில், 'டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வருவோரிடம் பணம் பார்க்கும் செயலில் ஈடுபட வேண்டாம்' என, தனியார் மருத்துவமனைகளை அரசு எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழக சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:டெங்கு, வைரஸ் காய்ச்சலுடன் சிகிச்சைக்கு வருவோரிடம், பணம் பார்க்கும் செயல்களில் தனியார் மருத்துவமனைகள், டாக்டர்கள் ஈடுபடக் கூடாது; மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.'காப்பாற்றி விடுகிறோம்' எனக்கூறி, லட்சக்கணக்கில் பணம் வசூலித்த பின், இக்கட்டான நிலையில், அரசு மருத்துவமனைக்கு அனுப்புவது, சரியான நடைமுறை அல்ல.காய்ச்சல் இருந்தால், பொதுமக்கள் தயவு செய்து, ஆரம்ப நிலையிலேயே அரசு மருத்துவமனைகளுக்கு வந்து விடுங்கள். கடைகளில் மருந்து வாங்கி சாப்பிட வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.


அலட்சியம் வேண்டாம்!

* 'ஏடிஸ்' எனும், பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்களால், டெங்கு பாதிப்பு வருகிறது. வீட்டின் உள்பகுதியிலும், சுற்றுப்புற பகுதிகளிலும், தண்ணீர் தேங்காமல், பார்த்துக் கொள்ள வேண்டும்
* குடிநீர் தொட்டிகள், தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்களை, வாரம் ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும்
* வீட்டைச் சுற்றி கிடக்கும் பிளாஸ்டிக் கப், டயர், தேங்காய் மட்டை போன்ற தேவையற்ற பொருட்களை அகற்றி, அழிக்க வேண்டும்
* காய்ச்சல் வந்தால், உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்குச் செல்வது நல்லது
* உடலில் சுரக்கும் வியர்வை வாடை, கொசுக்களை ஈர்க்கும் என்பதால், தினமும் இருமுறை குளிப்பது நல்லது
* எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த, நிலவேம்பு கஷாயம் குடிக்கலாம்.