ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்

ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்: உடனடியாக நிறைவேற்ற வேண்டிய பரிந்துரைகள் குறித்து ஆராய குழு அமைக்க ஆணை
ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உடனடியாக நிறைவேற்ற வேண்டிய பரிந்துரைகள் குறித்து, நீதிம
ன்றத்துக்கு தெரிவிப்பதற்காக குழு அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தக் குழுவில் தமிழக அரசு, மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு, சென்னை உயர் நீதிமன்ற சிறார் நீதிக் குழு ஆகியவை இடம்பெற்றிருக்க வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சேஞ்ச் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் ஏ.நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் தொடர்பான வழக்கில் கூடுதல் மனுவைத் தாக்கல் செய்தார். 
அவரது மனு விவரம்:
தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் உள்ளிட்ட குழந்தைகள் இல்லங்களைக் கண்காணிக்க மாவட்ட அளவில் நன்னடத்தை அதிகாரிகள், சட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின்படி, நன்னடத்தை அதிகாரி உள்பட 15 பணியிடங்களை அரசு நிரப்பவேண்டும். ஆனால், அரசு இதுவரை அந்தப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் மட்டுமல்லாமல், மண்டல அளவில் தலைமை நன்னடத்தை அதிகாரிகளை நியமிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் இந்த மனுவில் கோரப்பட்டிருந்தன. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதன்மை அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்குப் பிறகு அவர்கள் பிறப்பித்த உத்தரவு:-
தமிழக அரசு, மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு, சென்னை உயர் நீதிமன்ற சிறார் நீதிக் குழு ஆகியவற்றின் அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழு அமைக்க வேண்டும். 
இந்தக் குழு, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இந்த மனுவில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளில் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டியவை எவை என பரிசீலித்து சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை நவம்பர் 19-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.