'படிப்பு அவசியமில்லை' என நினைப்போர் அதிகரிப்பு: என்.எஸ்.எஸ்.ஓ., ஆய்வில் அதிர்ச்சி தகவல்

புதுடில்லி: இந்தியாவில், 100க்கு 13 பேர், பள்ளிக்கு சென்றதில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது; 'படிப்பு அவசியம் இல்லை' என, இவர்கள் கூறுவதாக, ஓர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பள்ளியில் சேர்க்க பணம் இல்லாமை, வீட்டு வேலைகள் போன்ற பல்வேறு காரணங்களால், சிறுவயதில் பள்ளியில் சேர முடியாமல் போவது சகஜம். மாறாக, படிப்பு அவசியம் இல்லை என நினைப்பதால், பெரும்பாலானோர் பள்ளியில் சேர்ந்து படிக்காமல் ஊர் சுற்றிக் கொண்டிருப்பதாக, என்.எஸ்.எஸ்.ஓ., எனப்படும், தேசிய மாதிரி கணக்கீட்டு அலுவலக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, என்.எஸ்.எஸ்.ஓ., ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:5 வயது முதல், 29 வயது வரையுள்ள நபர்களிடம், பள்ளிப்படிப்பு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. 100 பேரில், 13 பேர், படிப்பு அவசியம் இல்லை எனக் கருதுவதால், பள்ளியில் சேரவில்லை என்றோ, படிப்பை பாதியில் விட்டு விட்டதாகவோ தெரிவித்தனர். 10 வயது முதல் 14 வயதுள்ள குழந்தைகளிடையே, இந்த விகிதாச்சாரம் மிக அதிகமாக காணப்பட்டது. இந்த பிரிவில், மூன்று பேரில், ஒருவர், படிப்பு அவசியம் இல்லை எனக் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.