ஊரக சுகாதார திட்டத்தில் டாக்டர்கள் தேவை அதிகரிப்பு: தேசிய அளவில் சிறப்பாக செயல்படும் தமிழகம்

புதுடில்லி : தேசிய ஊரக சுகாதாரத் திட்டம் துவங்கி, 10 ஆண்டுகள் ஆகியும், போதிய மருத்துவர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் இல்லாமல், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இத்திட்டத்தின் கீழ், சிறப்பு மருத்துவர் தேவை, 81 சதவீதம் இருக்கிறது என, அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.


நாட்டின் கிராமப்புற மக்களின் சுகாதார, மருத்துவத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக, 2005ல், என்.ஆர்.எச்.எம்., எனப்படும், தேசிய ஊரக சுகாதாரத் திட்டம் துவங்கப்பட்டது. 10 ஆண்டுகள் ஆன பிறகும், இத்திட்டம் பெரியளவில் முன்னேற்றம் காணவில்லை என, துறை வல்லுனர்கள் கூறுகின்றனர். என்.ஆர்.எச்.எம்., குறித்து, மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், பல மாநிலங்களில், மருத்துவர்கள் இல்லாமல், ஆரம்ப சுகாதார மையங்கள் இயங்கி வருவதாக தெரிய வந்துள்ளது.


பற்றாக்குறை:

என்.ஆர்.எச்.எம்., திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் சிறப்பு மருத்துவர்கள், 81 சதவீதம் குறைவாக நியமிக்கப்பட்டு உள்ளனர். பொது மருத்துவர்கள், 12 சதவீதம்; நர்ஸ்கள், 21 சதவீதம்; துணை மற்றும் மகப்பேறு உதவி நர்ஸ்கள், 5 சதவீதம் குறைவாக உள்ளதாக அரசு அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.தொழில்நுட்ப ஊழியர்களுக்கும் அதிகளவில் பற்றாக்குறை நிலவு கிறது. மருந்தாளுனர்கள், 29 சதவீதம்; ஆய்வுக்கூட தொழிலாளர் கள், 45 சதவீதம்; ரேடியோகிராபர் கள், 63 சதவீதம் குறைவாக உள்ளனர்.
நிலைமை இப்படி இருக்க, சில மாநிலங்களில், மருத்துவத் துறையின் பல பிரிவுகளில், கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், ஆண்டுதோறும் தகவல் வெளியிட்டு வருவது புதிராக உள்ளது.

உதாரணமாக, ஆரம்ப சுகாதார மையங்களில், ஒரு மருத்துவர் இருக்க வேண்டுமென்ற விதிமுறைப்படி, நாடு முழுவதும், 25 ஆயிரத்து 308 மருத்துவர்கள் தேவை. ஆனால், 34 ஆயிரத்து 750 மருத்துவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாகவும்; 25 மாநிலங்களில், தேவைக்கு அதிகமாக மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவிக்கிறது.

இது தொடர்பாக, டாடா சமூக அறிவியல் மையத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் சுந்தரராமன் அளித்த விளக்கம்:ஒவ்வொரு பொது சுகாதார மையத்திலும், இரண்டு மருத்து வர்கள், 'ஆயுஷ்' எனப்படும் ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஓமியோபதி ஆகியவற்றில் தேர்ந்த மருத்துவர் ஒருவர் என, மொத்தம் மூன்று பேர் நியமிக்கப்பட வேண்டும் என, ஐ.பி.எச்.எஸ்., எனப்படும், இந்திய பொது தர விதிமுறை பரிந்துரைக்கிறது. கடந்த 2011ல், பொது சுகாதார மையத்துக்கு தேவைப்படும் மருத்துவர்களின் எண்ணிக்கை ஒன்றாகக் குறைக்கப்பட்டது. ஆனால், தமிழகம் போன்ற சில மாநிலங்களில், பொது சுகாதார மையங்களில், தலா இரு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐ.பி.எச்.எஸ்.,சின் பரிந்துரையை, ஒரு மருத்துவர் என, புள்ளி யியல் துறை மாற்றிக் கொண்ட தால், கூடுதல் மருத்துவர்கள் இருப்பதாக கணக்கு காட்டுகின்றனர். பொது சுகாதார மையங்களில் ஒரு மருத்துவர் என்பது, நடை முறைக்கு ஒத்து வராது. உண்மை யில், நாடு முழுவதும், மருத்துவர் பணியிடங்களுக்கு அதிக தேவை உள்ளது. மருத்துவர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தகவல் ஏற்க முடியாதது. இவ்வாறு சுந்தரராமன் கூறினார்.

7,000 பேருக்கு...:

தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு, 5,000 பேருக்கும் துணை சுகாதார மையங்கள் அமைக்கப்பட வேண்டும். மலைப் பகுதிகளில், 3,000 பேருக்கு ஒரு துணை சுகாதார மையம் இருக்க வேண்டும். தேசிய அளவில், இதன் தற்போதைய சராசரி, 5,400 பேராக உள்ளது. உ.பி., போன்ற சில மாநிலங்களில், 7,000 பேருக்கு ஒரு துணை சுகாதார மையம் மட்டுமே உள்ளது. அதேபோன்று, தேசிய அளவில், பொது சுகாதார மையங்கள், 30 ஆயிரம் பேருக்கு ஒன்று என்ற அளவில் இருக்க வேண்டும். ஆனால், தேசிய அளவில், சராசரியாக, 33 ஆயிரம் பேருக்கு ஒரு சுகாதார மையம் அமைக்கப்பட்டுள்ளது.
சி.எச்.சி., எனப்படும் சமூக சுகாதார மையங்கள், ஒரு லட்சம் பேருக்கு ஒன்றாக இருக்க வேண்டும். மாறாக, ஒன்றரை லட்சம் பேருக்கு ஒரு சி.எச்.சி., மட்டுமே உள்ளது.

சுகாதார மையத்தின் நோக்கம்:

* ஆரம்ப சுகாதார மையம், பொது சுகாதார மையம் என அழைக்கப்படுகிறது
* குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்து தருவது
* நோய் தடுப்பு திட்டங்கள் கொண்டு வருவது
*குழந்தை கட்டுப்பாடு திட்டங்கள் கொண்டு வருவது
* கர்ப்பம் மற்றும் தொடர்பான சிகிச்சை தருவது
*அவசர கால சிகிச்சை தருவதுசெயல்பாடுகள்
* மகப்பேறு - குழந்தை நலம், குடும்ப கட்டுப்பாடு
* பாதுகாப்பான நீர் வினியோகம், அடிப்படை சுகாதாரம்
* நோய் பரவல் தடுப்பு
* மருத்துவம் தொடர்பான முக்கிய தகவல்களை சேகரித்தல், அறிக்கை சமர்ப்பித்தல்
* சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு
* சுகாதார ஊழியர்களுக்கு பயிற்சி, வழிகாட்டுதல்.