டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

மாணவர்களுக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்ப
வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: டெங்கு, பறவைக் காய்ச்சல் தடுப்பது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை சார்பில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
அந்த ஆய்வுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகளைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்குமாறு தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கு உத்தரவிட வேண்டும். அதன் விவரம்: மாணவர்களிடம் அவ்வப்போது கைகளைச் சுத்தப்படுத்திக் கொள்வது குறித்தும், குறிப்பாக உணவு உண்பதற்கு முன்பு கைகளைக் கழுவுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வகுப்பறைகளைச் சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைத்திருக்க வேண்டும். வகுப்பறை, கழிவறைகளைச் சுற்றித் தண்ணீர் தேங்கி இருந்தால், அதை அகற்றுவதற்கு தலைமையாசிரியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குடிநீர்ப் பானைகள், தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும். இதன் மூலம் கொசுக்களின் பெருக்கத்தைத் தடுக்க முடியும்.

பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பற்றிய அறிகுறிகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதனை மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களுக்கும் தெரிவித்து, இது குறித்த விழிப்புணர்வை தங்கள் குடும்பத்தினருக்கும் ஏற்படுத்த வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்களிடம் கடுமையான காய்ச்சல், சளி, இருமல் முதலிய அறிகுறிகள் காணப்பட்டால் அதனை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் உடனடியாகத் தெரியப்படுத்த வேண்டும். மாணவர்களிடம் இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவனைக்குச் செல்ல அறிவுறுத்த வேண்டும். மாணவர்களுக்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளுமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். எந்த சூழ்நிலையிலும் தாமாக மருத்துவம் செய்துகொள்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்த வேண்டும். சென்னை, திருப்பூர், திருச்சி, சேலம், தேனி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் கூடுதலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.