சித்த மருத்துவத்தை தேடி நோயாளிகள் டாக்டர்கள் பணியிடங்களோ காலி

திண்டுக்கல்: தமிழகத்தில் மாவட்ட, தாலுகா மருத்துவமனைகளில் சித்த மருத்துவ பிரிவுக்கு ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். ஆனால், பல மாவட்டங்களில் டாக்டர்கள் பணியிடங்கள் காலியாகவே உள்ளன.

தமிழகத்தின், 32 மாவட்ட மருத்துவமனைகளில், 12 மாவட்டங்களில் சித்த மருத்துவ பணியிடம் இருந்தும், டாக்டர் நியமனம் இன்றி காலியாக உள்ளது. இதேபோல, 20 மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளிலும் இந்த டாக்டர்கள் பணியிடம் காலியாக உள்ளது.
பெரும்பாலும், 20 ஆண்டுகளுக்குள் புதிதாக உதயமான பல மாவட்டங்களில் தான், பல ஆண்டுகளாக டாக்டர்கள் இல்லாமல் உள்ளது. மதுரை, தேனி மாவட்டங்களுக்கு பெரியகுளத்தில் தான் சித்த மருத்துவ டாக்டர் உள்ளார்.
ஒரு டாக்டர்அதே போல திருச்சி, பெரம்பலுார், கரூர், அரியலுார் மாவட்டங்களுக்கு ஒரு டாக்டரே உள்ளார்.
கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களுக்கும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கும் முன்பு பிரிக்கப்படாத நிலையில் இருந்த பணியிடத்தில் தான் டாக்டர்கள் உள்ளனர்.
மக்கள் தொகை அதிகரிப்பால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ள நிலையில், சித்த மருத்துவத்தை நாடுவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும், 20 சதவீதம் வரை
அதிகரித்துள்ளது. சில ஆண்டுகளாக அச்சுறுத்தி வரும், 'டெங்கு' காய்ச்சலை தடுக்க, இப்பிரிவிலும், பாதிப்புள்ள இடங்களுக்கும் சென்று வழங்கும் நிலவேம்பு கஷாயத்திற்கு அதிக வரவேற்பு உள்ளது. ஆனால், இப்பணிகளுக்கேற்ப டாக்டர்கள் இல்லை.
பல மாவட்டங்களில் காலியிடம் உள்ளதால், ஒரு டாக்டரே பக்கத்து மாவட்டங்களையும் சேர்த்து கவனிக்க வேண்டியுள்ளது. இதனால் வேலைப்பளு அதிகரித்தாலும், அவர்கள் சென்று வர வாகன வசதியும் கிடையாது.
காத்திருப்புமருத்துவ அலுவலர் பதவி உயர்வை எதிர்பார்த்து, பல சித்த மருத்துவ டாக்டர்கள் பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். உள்ளனர். டி.என்.பி.எஸ்.சி., அமைப்பும், 25 ஆண்டுகள் பணி முடித்தவர்களை, 172 மருத்துவ அலுவலர் பணியிடத்திற்கு பதவி உயர்த்துமாறு உத்தரவிட்டுள்ளது.
ஆனால், பல ஆண்டுகளாக அது நடைமுறைக்கு வரவே இல்லை. சித்த மருத்துவ பிரிவை மேம்படுத்த டாக்டர்களை நியமிக்க வேண்டும்.