ஆய்வக வசதி இல்லாத அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரிகள்: செய்முறைத் தேர்வுக்கு மாணவர்கள் தனியார் கல்லூரிகளுக்கு செல்லும் பரிதாபம்

அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அடிப்படை ஆய்வக வசதிகள் இல்லாமல்செயல்பட்டு வருவதால் அங்கு படிக்கும் மாணவர்கள் செய்முறைத் தேர்வுக்கு அருகேயுள்ள தனியார் கல்லூரிகளின் தயவை நாட வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
          முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் அண்ணா பல்கலைக்கழகம் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டது. மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களிலும் அண்ணா பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்தப்பட்டன.இந்த நிலையில், 2011-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், புதிதாக தொடங்கப்பட்ட 4 அண்ணா பல்கலைக்கழகங்களும் 2012-ல் சென்னை அண்ணா பல்கலைக்கழக மண்டல மையங்களாக மாற்றப்பட்டு இப்பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டன.
இதேபோன்று காஞ்சிபுரம், ஆரணி, திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, திருக்கு வளை, அரியலூர், திருச்சி, பட்டுக்கோட்டை, ராமநாதபுரம்,திண்டுக்கல், தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய இடங்களில் இயங்கி வரும் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரிகளும் பல்கலைக்கழகத்தின் கீழ்கொண்டுவரப்பட்டன.அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள் என்ற காரணத்தினால் கல்லூரியின் பெயர் முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டு கிராமப்புற மாணவர்கள் உறுப்பு கல்லூரிகளில் சேர்ந்தனர். இக்கல்லூரிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.உறுப்புக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அக்கல்லூரிகளுக்கு தேவையான ஆய்வக வசதிகள், ஆய்வக கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை.ஆய்வக வசதி இல்லாத காரணத்தினால், அங்கு படிக்கும் மாணவ-மாணவிகள் செய்முறைத்தேர்வுக்கு அருகேயுள்ள தனியார் கல்லூரிகளுக்கு செல்ல வேண்டிய அவலநிலை நீடிக்கிறது. அண்ணா பல்கலைக்கழக கல்லூரியில் படித்துக்கொண்டு, ஆய்வக வசதி இல்லாததால், செய்முறைத் தேர்வுக்காக தனியார் கல்லூரிக்கு செல்லவேண்டிய பரிதாப நிலையை நினைத்து மாணவர்கள் மனம் வெதும்புகிறார்கள்.
மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினை ஒருபுறம் என்றால் இன்னொரு புறம் பேராசிரியர்களும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். உறுப்பு கல்லூரிகளை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைத்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டபோதும், அக்கல்லூரிகளைச் சேர்ந்த 585 நிரந்தர பேராசிரியர்களுக்கும், 375 பணியாளர்களுக்கும் இன்னும் அதற்குரிய இணைப்பு ஆணை வழங்கப்படவில்லை. இதனால், அவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக வருடாந்திர ஊதிய உயர்வு கிடைக்கவில்லை. கடந்த 1.8.2012 அன்று பெற்றுவந்த அதே ஊதியத்தைத்தான் இன்னும் பெற்று வருகின்றனர்.இதுகுறித்து பாதிக்கப்பட்ட பேராசிரியர்களும், பணியாளர் களும் கூறியதாவது:எங்களுக்கு கடந்த 4 ஆண்டு காலமாக வருடாந்திர ஊதிய உயர்வு (இன்கிரிமென்ட்) கிடையாது. ஈட்டிய விடுப்பு ஊதியம் இல்லை, மருத்துவ விடுப்புக்கு அனுமதி கிடையாது.
பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு ஊதியம் இல்லை. எங்கள் பிரச்சினை தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்திடமும், தமிழக அரசிடமும் தொடர்ந்து எடுத்துக்கூறியும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எங்களுக்கு இணைப்பு ஆணை வழங்குவது தொடர்பான கோப்பு முதல்வர் அலுவலகத்தில் 4 மாதங் களாக நிலுவையில் இருப்பதாக சொல்கிறார்கள். எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.இன்னொரு முக்கிய பிரச்சினை என்னவென்றால், உறுப்பு பொறியி யல் கல்லூரிகளுக்கு இன்னும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அங்கீகாரங்கள் பெறப்படவில்லை. இதன் காரணமாக, மத்திய அரசு மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களிடமிருந்து நிதி பெற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
அங்கீகாரம் இல்லை
மேலும், உறுப்பு கல்லூரிகளின் பெயரை வெறுமனே பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி என்று மாற்றியிருக்கிறார்கள். இதனால், நேர்முகத் தேர்வின்போது மாணவர்கள் பல்வேறு பிரச்சினை களுக்கு ஆளாகிறார்கள். மாணவர் களின் நலனை கருத்தில்கொண்டு “பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி” என்பதை “அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி” என்று மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.