அப்துல் கலாமின் கனவை நிறைவேற்ற ஆளுக்கொரு மரம் வளர்க்க வேண்டும்:உயர்நீதிமன்ற நீதிபதி பேச்சு

ராமநாதபுரம்:அப்துல் கலாமின் கனவு மெய்ப்பட அனைவரும் ஆளுக்கொரு மரம் வளர்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விமலா வேல் முருகன் பேசினார்.ராமநாதபுரத்தில் தமிழ்ச்சங்கம் சார்பில் நடந்த பாரதி விழாவில் அவர் பேசியதாவது: விழாவில் பேசியவர்கள் பாரதி பிறந்து வா என்றனர். அவர் இறந்தால் தானே பிறந்து வரவேண்டும். அவர் நம்முடன்
வாழ்ந்து கொண்டிருக்கிறார். மாதர் தம்மை இழிவு செய்யும் மடமை கொளுத்துவோம் என்றார் பாரதி. ஆனால் இன்று மாதரை கொளுத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

கருத்து வேறுபாடால் 27 ஆண்டுகளாக கணவரை பிரிந்த மனைவி ஜீவனாம்சம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணையின் போது ஒரு பெண் 27 ஆண்டுகளாக ஆண் துணையின்றி எப்படி வாழ முடியும் என கணவர் வினா எழுப்பினார்.

இத்தனை நாட்களாக என் தந்தையுடன் வாழ்ந்தேன். அவர் இறந்து விட்டதால் ஜீவனாம்சம் கோரினேன். இத்தனை ஆண்டுகளாக நான் வாழ்ந்தது பெரிதல்ல. எப்படி ஆண் துணையின்றி வாழ்ந்தாய் என்ற கேள்வி என்னை சாகடித்து விட்டது என்றார் அப்பெண். இது போன்ற மடமைகளை கொளுத்த வேண்டும்.

இன்னும் பல இடங்களில் பெண்களுக்கு முழு சுதந்திரம் இல்லை. விவசாயம் செழிக்க நதிநீர் இணைப்பிற்கு தீர்வு காண வேண்டும். விவசாயம் உலகமயமாக்கப்பட வேண்டும். எதிர்கால சுற்றுச்சூழல், இயற்கை வளத்தை பாதுகாக்கவும், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் கனவு மெய்ப்படவும் ஆளுக்கொரு மரம் வளர்க்க வேண்டும். சில கட்டுப்பாடுகள், கொள்கைகளை பெயரளவில் பின்பற்றி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.