ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதை கைவிடக் கோரிக்கை

  முதல் பருவத் தேர்வு நேரத்தில் ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி அளிப்பது மாணவர்களின் கல்வி நலனை பாதிக்கும் என்பதால், தேர்வு முடிந்த பின்பு பயிற்சி அளிக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி வலியுறுத்தியது.


             அந்த அமைப்பின் மாவட்டப் பொருளாளர் து.ராமராஜ் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உள்ள 380 ஒன்றியங்களிலும் 34,867 தொடக்கப் பள்ளிகளும், 9,948 நடுநிலைப் பள்ளிகளும் உள்ளன. இந்தப் பள்ளிகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, முதல் பருவத் தேர்வானது வரும் 19ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தேர்வு சார்ந்த பயிற்சிகளை மாணவ, மாணவியருக்குத் தர வேண்டிய சூழலில், ஆசிரியர்கள் பயிற்சிக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், கணித உபகரண பயிற்சி, 9, 10, 11-ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது இரண்டாம் கட்டமாக, 14, 15, 16-ஆம் தேதிகளில் நடத்தப்படுகிறது. அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 15, 16, 18-ஆம் தேதிகளிலும், ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 15-ஆம் தேதியும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பள்ளிகளில் இருந்து பல ஆசிரியர்கள் பயிற்சிக்கு சென்று விடுகின்றனர். ஈராசிரியர் பள்ளிகள் இந்தப் பயிற்சிகளால் தேர்வு நேரத்தில்கூட ஓராசிரியர் பள்ளிகளாகச் செயல்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. மற்ற பள்ளிகளிலும் சொற்ப எண்ணிக்கையிலான ஆசிரியர்களே பள்ளியில் பணியாற்றும் நிலை உள்ளது.

இதனால் மாணவர்களின் கல்வித் தரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஆண்டுக்கு 20 நாள்கள் தர வேண்டிய பயிற்சியை, ஒரே சமயத்தில் பருவத் தேர்வு நேரத்தில் அவசரமாக அளிப்பது கேள்விக்குறியாக உள்ளது. மேலும், இந்த தொடர் பயிற்சிகளால் பள்ளிகளில் ஆசிரியர் பணி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

முதல் பருவத் தேர்வு நேரத்தில், ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி அளிப்பது, மாணவர்களின் கல்வி நலனிலும் அவர்களுடைய கல்வித் தரத்திலும் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதை தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி கண்டிக்கிறது

இந்தப் பயிற்சிகளை உடனே ரத்து செய்து, முதல் பருவத் தேர்வு முடிந்து இரண்டாம் பருவப் பள்ளி தொடக்கத்தில் இந்தப் பயிற்சிகளை நடத்த அனைவருக்கும் கல்வி இயக்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.