விண்ணில் 'ஆஸ்ட்ரோசாட்' செயற்கைக்கோள்!

சென்னை : விண்வெளி ஆய்வுக்கான 'ஆஸ்ட்ரோசாட்' செயற்கைக் கோள், நேற்று காலை, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.'இஸ்ரோ' என அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம், விண்வெளி ஆய்வுக்கான பிரத்யேக செயற்கைக்கோளை உருவாக்க 2004ல் திட்டமிட்டது. ஆஸ்ட்ரோசாட் என பெயரிடப்பட்ட அந்த செயற்கைக்
கோளை, 2007ல் விண்ணில் செலுத்தவும் திட்டமிட்டது. ஆனால் தொழில்நுட்ப ரீதியான பிரச்னைகளால் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவது தாமதமானது.
இந்நிலையில், இந்த செயற்கைக்கோளை உருவாக்கும் பணி சில நாட்களுக்கு முன் நிறைவுபெற்றது. சென்னை அருகே ஸ்ரீஹரிகோட்டா வில் சதீஷ் தவான் விண்வெளி மையம் உள்ளது. இங்குள்ள
முதலாவது ஏவுதளத்தில் இருந்து 'பி.எஸ்.எல்.வி., சி - -30' ராக்கெட் மூலம் நேற்று காலை 10:00 மணிக்கு இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில்
செலுத்தப்பட்டது.அத்துடன் இந்தோனேஷியா, கனடா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆறு சிறிய செயற்கைக்கோள்களும், பூமியில் இருந்து 650 கி.மீ., உயரத்தில் நீள்வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டன.
ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள 'அல்ட்ரா -வைலட் இமேஜிங் டெலஸ்கோப், சாப்ட் எக்ஸ் - -ரே டெலஸ்கோப்' உள்ளிட்ட, ஐந்து முக்கிய கருவிகள் மூலம் சூரிய குடும்பத்தை அடுத்துள்ள விண்வெளி பகுதியை அறிந்து கொள்ள வும் எக்ஸ் - -ரே கதிர்களின் மூலத்தை அறிந்து கொள்ளவும் முடியும். இந்த செயற்கைக்கோள், ஐந்து ஆண்டுகளுக்கு, விண்வெளி ஆய்வில் ஈடுபடும்.இஸ்ரோ தலைவர் கிரண்குமார் பேட்டி: இன்று எங்களுக்கு சிறப்பான நாள். விண்வெளி ஆய்வில், ஒரு மைல்கல்லாகக் கருதப்படும் ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில்
செலுத்தப்பட்டு உள்ளது.இந்த செயற்கைக்கோளில் இருந்து பெறப்படும் தகவல்கள், இந்திய விண்வெளி இயற்பியல் நிறுவனம் - ஐ.ஐ.ஏ.பி., மற்றும் டாடா அடிப்படை ஆய்வு
நிறுவனம் - டி.ஐ.எப்.ஆர்., உள்ளிட்ட ஆய்வு நிறுவனங்களில் உள்ள நிபுணர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.ஆஸ்ட்ரோசாட் செயற்கைக் கோள் வடிவமைப்பில், 150 தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு உள்ளது. இன்னும் ஐந்து ஆண்டுகளில், பி.எஸ்.எல்.வி., ராக்கெட் ஏவுதலில், தொழில்
நிறுவனங்களின் பங்களிப்பு அதிகம் இருக்கும்.'மங்கள்யான்' செயற்கைக்கோள், இரண்டரை நாட்களுக்கு ஒரு முறை, நான்கு படங்களை அனுப்புகிறது. 40 கோடி கி.மீ., துாரத்திற்கு அப்பால் மங்கள்யான் உள்ளதால் தகவல் அனுப்புவதிலும், பெறு
வதிலும் தாமதம் ஏற்படுகிறது. அந்த செயற்கைக்கோள், ஒரு ஆண்டு காலத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது.வரும் நவம்பர் இரண்டாம் வாரத்தில் 'ஜிசாட் 15' செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்படும். ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., வரிசையில் ஏற்கனவே நான்கு செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு
உள்ளன. மீதியுள்ள மூன்று செயற்கைக்கோள்கள், 'ஹீலியோஸ்' செயற்கைக்கோள் ஆகியவற்றை அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளோம்.
சூரியனை ஆராய உருவாக்கப்படும் 'ஆதித்யா' செயற்கைக்கோள் திட்டத்தின் முதற்கட்ட திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 'ஆர்யபட்டா முதல் ஆஸ்ட்ரோசாட் வரை' என்ற, 'சிடி' வெளியிடப்பட்டுள்ளது. இஸ்ரோ மூலம் இதுவரை செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்களின்
தகவல்கள் இந்த 'சிடி'யில் இடம் பெற்றுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

ஆஹா...'ஆஸ்ட்ரோசாட்'


இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வு செயற்கைக்கோளான'ஆஸ்ட்ரோசாட்' நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.* 'ஆஸ்ட்ரோசாட்'டின் முக்கிய நோக்கம் புற ஊதாக் கதிர்கள், குறைந்த மற்றும் அதிக திறன் கொண்ட எக்ஸ்ரே கதிர்களை ஆய்வு செய்வது. இதற்காக 5
கருவிகள் உள்ளன. இதன் மூலம் விண்வெளியில் உள்ள கருந்துளையில் இருந்து (பிளாக் ஹோல்) வரும் எக்ஸ்ரே கதிர்களை ஆய்வு செய்யலாம். மேலும்
பிரபஞ்சம் பற்றிய ஆய்வுகளிலும்ஈடுபடும்.* பி.எஸ்.எல்.வி., -சி30 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட இந்த செயற்கைக்கோள், பூமியில் இருந்து 650 கி.மீ., உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இது,
பி.எஸ்.எல்.வி., வரிசையில் 'இஸ்ரோ' அனுப்பிய 31வது ராக்கெட். இதில் 30 முறை வெற்றியில் முடிந்தது. பி.எஸ்.எல்.வி., மூலம் 84 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன.
* விண்வெளி ஆய்வு செயற்கைக்கோளை அனுப்பிய 4வது நாடு. இதற்கு முன் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகள் அனுப்பி உள்ளன வளரும்
நாடுகளில் முதல் இடத்தை இந்தியா பெற்றுள்ளது.* 'ஆஸ்ட்ரோசாட்' செயற்கைக்கோளுடன் 6 வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் அனுப்பபட்டன. இதில் அமெரிக்க செயற்கைக்கோளும் ஒன்று. 'இஸ்ரோ' இதுவரை 51 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியிருந்தாலும், அமெரிக்க செயற்கைக்கோளை அனுப்புவது இதுவே முதல் முறை.
* 1990ல் அமெரிக்கா, 'ஹபிள்' என்ற விண்வெளி ஆய்வு செயற்கைக்கோளை அனுப்பியது. இது, தற்போதும் செயல்பாட்டில் உள்ளது. இதை விட 'ஆஸ்ட்ரோசாட்' செயற்கைக்கோள் 10 மடங்கு எடை குறைவானது. இதன் எடை 1,513 கிலோ. ஆயுட்காலம் 5 ஆண்டுகள். செலவு, 180 கோடி ரூபாய்.