ஏழு மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆலோசனை

மதுரை:கல்வித் துறையில் தற்காலிக பணியிடங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி தொடர்பாக, ஏழு மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆலோசனை, மதுரையில் நேற்று முன் தினம் நடந்தது.மதுரை முதன்மை கல்வி அலுவலர்
ஆஞ்சலோ இருதயசாமி வரவேற்றார். இணை இயக்குனர் (என்.எஸ்.எஸ்.,) பொன்னையா தலைமை வகித்து, கணக்கெடுக்கும் பணி குறித்து விளக்கினார். மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர்.


இதில் பங்கேற்ற அதிகாரி ஒருவர் கூறுகையில், ''கல்வித் துறையில் தற்காலிக பணியிடங்களை, நிரந்தரப் பணியிடங்களாக மாற்றுவற்காக கூட்டத்தில் ஆலோசிக்கப்
பட்டது. இது குறித்து விவரங்களை வரும் 21ம் தேதிக்குள் சேகரித்து, 22ம் தேதி கல்வித்துறை 'ஆன்-லைனில்' பதிவேற்றம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் தற்காலிக பணியிடங்களில் பணியாற்றும் ஆசிரியர், ஆசிரியர் அல்லாதவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் நிதித்துறை ஒப்புதல் பெற்று சம்பளம் வழங்குவதில் ஏற்படும் தாமதம் தவிர்க்கப்படும். வேலுார், சேலம், திருச்சியில் இக்கூட்டங்கள் நடத்தப்பட்டன,'' என்றார். முதன்மை கல்வி அலுவலக கண்காணிப்பாளர் செந்தில் தலைமையில் அலுவலர்கள் ஏற்பாடுகளை செய்தனர்.