9 நாட்களுக்கு பிறகு சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது 3 துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடக்கிறது

9 நாட்களுக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடுகிறது. 3 துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது.
சட்டசபை கூட்டம் 2015–2016–ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட், கடந்த மார்ச் மாதம் 25–ந் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின்னர், பட்ஜெட் மீதான விவாதமும், முதல்–அமைச்சரின் பதில் உரையும் நடைபெற்றது.
கடந்த ஏப்ரல் மாதம் 1–ந் தேதியுடன் சட்டசபை நிகழ்வுகள் முடிவுக்கு வந்தன. துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதம் அப்போது நடைபெறவில்லை. இந்த நிலையில், தமிழக சட்டசபை கடந்த மாதம் (ஆகஸ்டு) 24–ந் தேதி கூடியது. அடுத்த நாள் (25–ந் தேதி) முதல் மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வந்தது. கடந்த 4–ந் தேதி வரை 9 நாட்கள் சட்டசபை கூட்டம் நடந்து முடிந்திருந்தது.
9 நாட்கள் விடுமுறைக்கு பிறகு.. இந்த நிலையில், சென்னை வர்த்தக மையத்தில் கடந்த 9, 10–ந் தேதிகளில் 2 நாட்கள் நடைபெற்ற உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு முன்னிட்டு, சட்டசபைக்கு 9 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. அதன் பிறகு, சட்டசபை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடுகிறது. இன்றைய கூட்டத்தில், வருவாய் துறை, இயற்கைச் சீற்றங்கள் குறித்த துயர்தணிப்பு, செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது.
வழக்கம் போல் இன்றைய கூட்டமும் காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்குகிறது. அதன்பிறகு, உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ரூ.2.42 லட்சம் கோடி தொழில் முதலீட்டை கொண்டு வந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்படும் என தெரிகிறது. தொடர்ந்து நடைபெறும் 3 துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில், ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேசுகிறார்கள்.
29–ந் தேதி நிறைவு உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பதில் அளித்து பேசுகிறார்கள். இறுதியில் தங்கள் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிட்டு பேசுகின்றனர்.
தொடர்ந்து நடைபெறும் சட்டசபை கூட்டம், வரும் 29–ந் தேதியுடன் (அரசு விடுமுறை நாட்கள் நீங்களாக) நிறைவடைகிறது.