மகிழ்ச்சியில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள்! 8 ஆண்டுகளுக்கு பின் கலந்தாய்வு

  பணி நியமனம் செய்யப்பட்டு, எட்டு ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணியாற்றி வந்த, கம்ப்யூட்டர் மற்றும் வேளாண்மை ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தஅரசு உத்தரவிட்டுள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம், 2007-8ம் கல்வியாண்டில் பணியமர்த்தப்பட்ட, 1,880 கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் இதுவரை பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவில்லை.



          இதனால், 1,880 ஆசிரியர்கள் ஒரே பள்ளியில் தேங்கிகிடக்கும் சூழல் உருவானது.திருமணமான ஆசிரியர்கள் தங்கள் குடும்பங்களை பிரிந்து வாழ்ந்துவரும் சூழல் தொடர்ந்த நிலையில், மன அழுத்தத்தில் பணிபுரியும் சூழல் இருந்து வந்தது. குறிப்பாக, பெண் ஆசிரியர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். இதனால், சக ஆசிரியர்களுக்கு நடப்பது போல் கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கும் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தவேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை கணினி ஆசிரியர்கள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தியது.

ஆசிரியர்களின் சூழலை உணர்ந்து தற்போது, கோரிக்கைக்கு செவிசாய்துள்ளது. சக ஆசிரியர்களுக்கு நடப்பது போன்று விதிமுறைகளை பின்பற்றி கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வு நடத்த பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்த தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.இதன் படி, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டு, 2015 செப்., 30 வரை காலியாக உள்ள கம்ப்யூட்டர் மற்றும் வேளாண்மை ஆசிரியர்கள் பணியிடங்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகள் வாரியாக கணக்கிட்டு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை கணினி ஆசிரியர்கள் சங்க பொதுசெயலாளர் பரசுராமன் கூறுகையில், ''எட்டு ஆண்டுகள் கோரிக்கை தற்போது தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. குடும்பங்களை பிரிந்து ஒரே பள்ளியில் தேங்கி, மனஅழுத்தத்தில் பணிபுரிந்த, 1880 ஆசிரியர்களுக்கும் தற்போது கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோரிக்கையை ஏற்ற, தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்,'' என்றார்.