வருமான வரி தொகை15 நாட்களில் கிடைக்கும்

புதுடில்லி:'வருமான வரி கணக்கு தாக்கலில் கூடுதலாக செலுத்திய தொகை, 7 - 15 நாட்களில் திருப்பி வழங்கப்படும்' என, வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.கடந்த, 2014 - 15ம் நிதியாண்டில் மாத சம்பளதாரர்கள் பெற்ற வருமானத்திற்கான வரி தொடர்பான கணக்குகளை தாக்கல் செய்ய, இம்மாதம் 7ம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டிருந்தது.



அதன் படி, நாடு முழுவதும், 2.06 கோடி பேர் தங்களின் வருமான விவரங்களையும், வரியையும், 'ஆன்லைன்' முறையில், வருமான வரி இணையதளம் மூலம் தாக்கல் செய்துள்ளனர்.செலுத்திய வரித்தொகை கூடுதலாக இருப்பின், அதை திருப்பி அனுப்ப, முன்னர், பல மாதங்கள் முதற்கொண்டு, சில ஆண்டுகள் வரை ஆகியது. ஆனால், இப்போது, ஆன்லைன் முறையில், வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப் படுவதால், அவை கம்ப்யூட்டர் மூலம், உடனுக்குடன்
சரிபார்க்கப்படுகின்றன.இதனால், கூடுதலாக செலுத்தியுள்ள வருமான வரித் தொகையை, குறைந்தபட்சம் ஏழு நாட்கள் முதல், 15 நாட்களுக்குள் திரும்பப் பெறலாம்.

இதற்கான வசதி, பெங்களூரில் உள்ள, சி.பி.சி., எனப்படும் மத்திய பகுப்பாய்வு மையத்தில் புதிதாக
ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு புதிதாக நிறுவப்பட்டுள்ள கம்ப்யூட்டர் வசதி மூலம், ஒரு நிமிடத்திற்கு, 3,475 கணக்குகளை சரிபார்க்க முடியும். அவற்றில், 45.18 லட்சம் கணக்குகள் சரிபார்க்கப்
பட்டு, 22.14 லட்சம் பேருக்கு, அவர்கள் கூடுதலாக செலுத்திய தொகை, இந்த
மாதத்திலேயே திருப்பி வழங்கப்பட்டுள்ளது.

வரி செலுத்துவோரால் கூடுதலாக செலுத்தப்பட்ட தொகை, அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இப்போது பின்பற்றப்படும் புதிய முறையில், வரி செலுத்துவோரின், 'ஆதார்' எண் அல்லது வங்கிக்கணக்கு எண் போன்றவற்றின் அடிப்படையில், அவர்களின் வரவு, செலவுகள் சரிபார்க்கப்படுகிறது.