இன்ஜி., கல்லூரி அங்கீகாரம் ஏ.ஐ.சி.டி.இ., புது முடிவு

இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளுக்கு, அங்கீகாரம் வழங்கும் முறையில் மாற்றம் கொண்டு வர, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலான - ஏ.ஐ.சி.டி.இ., முடிவு செய்துள்ளது. பொறியியல் மற்றும்
முதுகலை பொறியியல் படிப்புகளை நடத்தும், நாட்டில் உள்ள அனைத்து தொழில்நுட்பக் கல்லுாரிகளும், ஏ.ஐ.சி.டி.இ.,யில், அங்கீகாரம் பெற வேண்டும். அங்கீகாரம் இல்லாத கல்லுாரிகள், மாணவர்களை சேர்க்க முடியாது.
இந்நிலையில், ஏ.ஐ.சி.டி.இ.,யில் அனுமதி வழங்குவது மற்றும் அந்த அமைப்பை தொடர்பு கொள்வதில், சிக்கல்கள் உள்ளதாக, பல்வேறு கல்லுாரிகள் புகார் தெரிவித்தன.
அதனால், அங்கீகாரம் வழங்கும் முறையை எளிமையாக்கவும், வெளிப்படையானதாக மாற்றவும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனவே, அங்கீகாரம் வழங்கும் முறையில், செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன என்பது தொடர்பாக, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் இருந்தும், ஏ.ஐ.சி.டி.இ., கருத்து கேட்டுள்ளது.
அதாவது, அங்கீகாரம் வழங்குவதில் எந்த மாதிரியான மாற்றம் தேவை; வெளிப்படை மற்றும் தவறின்றி அங்கீகாரம் வழங்குவது எப்படி; விண்ணப்பங்கள் மற்றும் விதிமுறைகளை பூர்த்தி செய்வதில் உள்ள குறைபாடுகள் என்ன என்பது குறித்து, கல்வியாளர்கள், கல்வி நிறுவனங்கள் சார்பில், செப்டம்பர், 4க்குள் கருத்துகளைக் கூறலாம். கருத்துகளை, aphsuggestions2016-17@aicte-india.org என்ற இணையதள அஞ்சல் வழியாகவும் அனுப்பலாம்.


'ஸ்காலர்ஷிப்' :


பள்ளிப்படிப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை, மாணவர்களுக்கு பல விதமான கல்வி உதவித்தொகை, மானியங்கள் மற்றும் கல்வித்திட்டங்களை, மத்திய அரசு செயல்படுத்துகிறது. இருப்பினும், இத்திட்டங்கள் குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கல்வி உதவித்தொகை பெற்றுத் தரவும், கல்லுாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
அதனால், அனைத்து இன்ஜினியரிங் மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கும், ஏ.ஐ.சி.டி.இ.,யும், - யு.ஜி.சி.,யும் கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பித்துள்ளன. அதன்விவரம்:
● அனைத்து கல்லுாரிகளும், தங்களது இணையதளத்தில் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை மற்றும் மானியங்கள் குறித்த தகவல்களை, மாணவர்கள் அறியும்படி வெளியிட வேண்டும்.
● மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கு, கல்வி உதவித்தொகை நேரடியாக அனுப்பப்படுவது குறித்தும் விவரிக்க வேண்டும்.
● மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டங்கள், மாணவர்களை சென்றடைய, கல்லுாரிகள் முழு முயற்சி எடுக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.