அன்பாசிரியர் - சித்ரா: அஞ்சல் அட்டை முதல் யூடியூப் வரை அசத்தும் ஆசிரியை!

       "பெரிய அளவில் பணம் சம்பாதிப்பதற்குப் பதிலாக, பெரிய மாற்றத்தை விதைக்க ஆசைப்பட்டேன். அதனாலேயே ஆசிரியர் ஆனேன்!"- தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் சாதித்ததற்காக குடியரசுத் தலைவரிடம் தேசிய விருது, அப்துல் கலாமின் பாராட்டு, மைக்ரோசாப்ட்டின் உலகளாவிய மன்ற, தேசத்தின் சாதனையாளர் விருது, நல்லாசிரியர் விருது மற்றும் ஏராளமான தேசிய, மாநில, ஊரக விருதுகள் பெற்ற சித்ரா என்னும் அரசுப் பள்ளி ஆசிரியரின் வார்த்தைகள் இவை.

இனி சித்ராவின் பயணம், அவரின் வார்த்தைகளிலேயே...
"1996-ம் ஆண்டு விக்கிரவாண்டி ஊராட்சியின் வாக்கூர்பகண்டை என்னும் ஊரின் தொடக்கப் பள்ளியில், என் ஆசிரிய வாழ்க்கை தொடங்கியது. அப்போது நான் ஒன்றாம் வகுப்பு ஆசிரியை. வழக்கமான அ, ஆ தானே என்றிருந்த எனக்கு, மாணவர்களே பாடம் சொல்லிக் கொடுத்துவிட்டார்கள், அவர்கள் எழுதிய 'அ'வையும், 'ஆ'வையும், படிக்க கூடுதல் முயற்சி தேவைப்பட்டது.

அப்போது பேருந்தில் பள்ளிக்கு வந்து சேர ஒன்றரை மணி நேரம் ஆகும். அந்த சமயத்தில் குஜராத்திய எழுத்தாளர் ஒருவர் எழுதிய 'கனவு ஆசிரியர்' என்ற புத்தகம் கிடைத்தது. அதில் கூறப்பட்டிருந்த வழிமுறைகளையும், அறிவுரைகளையும் எனக்கு ஏற்றாற்போல மாற்றிக் கொண்டேன். மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க, அரசு நடத்திய பயிற்சி முகாம் அதிக உதவியாக இருந்தது. 'விளையாட்டு வழி' கல்வி முறையைப் பின்பற்ற ஆரம்பித்தேன்.
மாணவியிடம் கற்ற பாடம்

குச்சி, புளியங்கொட்டைகளை வைத்து கணக்கு சொல்லிக் கொடுத்தேன். மாணவர்களை அருகில் இருந்த வயல்களுக்கு அழைத்துக் கொண்டு போய் அறிவியல் சொல்லிக் கொடுப்பதும், வகுப்பறையிலேயே விதைகள் இட்டு செடிகள் வளர்ப்பதும் வழக்கமாய் இருந்தது. மாலை நேரங்களில் பாட்டு மூலம் பாடம் கற்றுக் கொடுக்கத் தொடங்கினேன்.
ஒரு முறை ஆர்வமிகுதியில் மூன்றாம் வகுப்புக் குழந்தைகளுக்கு மினி கிரைண்டர் மாதிரி செய்து எடுத்துக் கொண்டு போனேன். "இது எதுக்கு டீச்சர்? இதுதான் எங்க வீட்டுலயே இருக்கே!" என்றாள் ஒரு மாணவி. அப்போதுதான் சிரமப்பட்டு கடினமான எதையும் செய்து காட்டுவது தேவையற்றது என்பதை உணர்ந்தேன்.

மனம் நெகிழ்ந்த தருணம்
மெல்ல மெல்ல கற்றலின்பால் குழந்தைகளுக்கு ஆர்வம் ஏற்பட்டது. பள்ளி மாணவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விழாக்களில் ஆவலுடன் கலந்து கொள்ள ஆரம்பித்தனர். சுதந்திர தினம், குடியரசு தினம் என அரசு விழாக் கொண்டாட்டங்களிலும் திருக்குறள் ஒப்பித்தல், பாட்டுப் போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகளிலும், பங்குபெற்றனர். குக்கிராமத்தில் இருந்து வெளியே கூட சென்றிருக்காத அக்குழந்தைகள், முதன்முதலாக ஆட்சியர் அலுவலகம் போய் பரிசுகளுடன் திரும்பி வந்தனர்.

பரிசுகளை வென்றதாகக் கேட்ட தருணத்தில் எங்கள் கால்கள் தரையிலேயே படவில்லை. ஒவ்வொரு விழாவிலும் போட்டிகளில் கலந்து கொள்வது வழக்கமானது. நீர்ப்பிரச்சினைகள், உடல்நலப் பிரச்சினைகள், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு குறித்த கார்ட்டூன் கதைகளை ஒவ்வொரு வாரமும் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன். பாண்டிச்சேரி வானொலி நிலையத்திலும் எங்கள் மாணவர்கள் ஏராளமான நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

எனக்காக போராடிய கிராமத்தினர்
'பள்ளிக்கு யார் வந்தாலும் பயப்படக்கூடாது. இயல்பாக அவர்களை வரவேற்று, பள்ளியைச் சுற்றிக் காண்பிக்க வேண்டும்' என்று சொல்லியிருந்தேன். ஒரு முறை மாவட்ட ஆட்சியர் எங்கள் பள்ளிக்கு திடீர் வருகை தந்தார். மாணவர்களே அவரை வரவேற்ற விதத்தைப் பார்த்து அசந்து போனவர், அடுத்த நாளே எங்களுக்கு விருதளித்துச் சிறப்பித்தார்.
ஒரு முறை நான், விடுமுறை காரணமாக வெளியூருக்குப் போய்விட்டு, திங்கட்கிழமை காலையில் பள்ளிக்குத் திரும்பினேன். சைக்கிளில் வேகமாக வந்து கொண்டிருந்த என்னைப் பார்த்து கிராம மக்கள் புன்முறுவல் பூத்தனர். எனக்கு எதுவுமே புரியவில்லை. பின்னர் தான் அந்தச் சிரிப்பின் பின்னால் இருக்கும் அன்பும், நம்பிக்கையும் புரிந்தது.
இரண்டு நாட்களுக்கு முன்னால், நான் மாற்றலாகி வேறு ஊருக்குச் செல்ல உத்தரவு வந்திருக்கிறது. ஆனால் கிராம மக்கள், என்னை அனுப்பக்கூடாது என்று தொடர்போராட்டம் நடத்தி, உத்தரவைத் திரும்பப் பெற வைத்திருக்கின்றனர். நான் வாங்கிய எல்லா விருதுகளின் ஆனந்தத் தருணத்தை விட, இந்தத் தருணமே என்னை அதிகம் சந்தோஷப்படுத்தியது" என்கிறார்.

கற்பித்தலில் எளிமைகளும் புதுமைகளும்
கற்றலிலும் கற்பித்தலிலும் எளிமையையும், புதுமையையும் விரும்பினார் ஆசிரியை சித்ரா. ஆரம்பப் பள்ளி மாணவர்கள் எழுதிப் பழக வேண்டுமென்பதற்காக, தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துகளை அச்சிட்டு, முத்திரையாக்கினார். அதை ஒவ்வொரு குழந்தையின் நோட்டுப்புத்தகத்தில் அச்சு வைத்து எழுதக்கற்றுக் கொடுத்தலில் புதுமை படைத்தார். வகுப்பில் கல்வியைத் தாண்டி நல்ல பழக்கங்களையும் கற்றுக்கொடுப்பதை வழக்கமாகக் கொண்டவர், கழிவறைகள் தேவையைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக, மத்திய அரசின் சுகாதாரத்துறை விருதையும் பெற்றிருக்கிறார்.

கலாம் தந்த வியப்பு
பள்ளியில் 'கடிதம் எழுதுதல்' பகுதியை நோட்டிலே எழுதித்தான் பழக்கப்பட்டிருப்போம். ஆனால் ஆசிரியை சித்ரா, அருகில் உள்ள தபால் நிலையத்தில் இருந்து அஞ்சல் அட்டைகளை வாங்கி கடிதம் எழுதக் கற்றுக் கொடுத்திருக்கிறார். அதன் நீட்சியாக, மாணவர்கள் சிலர், குடியரசு தின மற்றும் பொங்கல் வாழ்த்துக் கூறி, டெல்லி ஜனாதிபதி மாளிகைக்குக் கடிதம் எழுதி அனுப்பியிருக்கின்றனர். சற்றும் எதிர்பார்க்காத ஆச்சரியமாய் டெல்லியில் இருந்து பதில் கடிதம் வந்தது. அதில் அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாமின் கையொப்பம் இடப்பட்டு தமிழில் பதில் அளிக்கப்பட்டிருந்தது.

கணினி... சாதனையின் தொடக்கப்புள்ளி!
பள்ளி மெல்ல மெல்ல வளர்ச்சி அடையத் தொடங்கிய நிலையில், ஆசிரியை சித்ராவுக்கு வேறு ஊருக்கு மாற்றல் வந்தது. 2008-ம் ஆண்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அஸ்தினாபுரம் ஆரம்பப்பள்ளிக்கு வந்து சேர்ந்தார். கணிப்பொறியின் ஆக்கிரமிப்பு தொடங்கியிருந்த காலம் அது. ஆர்வமாய்க் கணினி கற்கத் தொடங்கினார் சித்ரா.
நினைத்த வேலைகளைக் குறுகிய நேரத்தில் செய்துவிட முடிகிற உலகத்தினுள் நுழைந்ததாய் உணர்ந்தார். தான் கற்றதை மாணவர்களுக்கும் சொல்லிக் கொடுக்க ஆசைப்பட்டார். ஆனால் அது மிகப்பெரிய சாதனையின் தொடக்கப்புள்ளியாக இருக்கும் என்பது அப்போது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

பள்ளியில், மதிய உணவு இடைவேளைகளில் விருப்பமுள்ள மாணவர்கள் கணினி கற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தார். கணிப்பொறியை எப்படித் திறப்பது, இயக்குவது, மேலும் அடிப்படையான எம்.எஸ்.ஆபிஸ் குறித்தும் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.
தனது பயணம் குறித்து மேலும் பேசுகிறார் சித்ரா.
"2010-ல் இணையத்தில் உலவிக் கொண்டிருந்த போது, சோலார் குக்கரின் செயல்முறையைப் பார்த்தேன். விளையாட்டாய் மாணவர்களிடம் காண்பித்து, அதை முயற்சித்துப் பார்க்கச் சொன்னேன். அவர்களும் சில முறைகள் முயன்றனர், ஆனால் அரிசி வேகாமல் அப்படியே இருந்தது. அடுத்தடுத்த நாட்களில் திரும்பத் திரும்ப அவர்கள் முயற்சிக்க, சோலார் குக்கர் வெற்றிகரமாக இயங்கியது.

சமூக சேவகி கிரண் பிர் சேத்தியின் 'டிசைன் ஃபார் சேஞ்ச்' அமைப்பு சிறந்த கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் பள்ளி மாணவர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் விருது வழங்குகிறது. அதன் சிறந்த 20 கண்டுபிடிப்புகளில் ஒன்றாக எங்களின் கண்டுபிடிப்பும் தேர்வாகியது. அச்சம்பவம், அங்கீகாரத்தை எதிர்பார்க்காமல், மாணவர்கள், புதிது புதிதாய்க் கண்டுபிடிப்புகள் நிகழ்த்த ஏதுவாக அமைந்தது.

பல ஆசிரியர்கள் பாடப்புத்தகத்தை, பைபிளாகத்தான் பார்க்கின்றனர். அதைத் தாண்டி வேறு எதையுமே மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை.
தொழில்நுட்பம் அதன் போக்கில் வளர்ந்துகொண்டே இருக்கிறது. அதன் நன்மைகளை உணர்ந்து பயன்படுத்துவது எப்படி என்பதை மாணவர்களே எங்களுக்குக் கற்றுக் கொடுக்கின்றனர்" என்கிறார்.

ஆசிரியப்பணி தவிர, பள்ளிக் கல்வித்துறையின் சமூக அறிவியல் பாடத் திட்ட உறுப்பினராகவும் இருக்கிறார் சித்ரா. பாடத்திட்டங்களை உருவாக்கும் சமயத்தில் இரவு பகலாக உழைத்து, புத்தகத்தை வடிவமைத்ததில் இவரின் பங்கும் தவிர்க்க முடியாததாய் இருந்திருக்கிறது. மாணவர்களைத் தன் இரு கண்களாய் பாவித்த கலாம் மாணவர்களுக்குப் பதிலளித்த சம்பவம், தற்போது மூன்றாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

ஆசிரியர்களை ஊக்குவிக்கும் பணி
சத்தமின்றி இன்னொரு முக்கியப் பணியையும் இவர் செய்து வருகிறார். தனக்கு ஏதோ ஒரு வகையில் தெரிந்த, அறிந்த அரசுப் பள்ளி ஆசிரியர்களில் எவரேனும் கற்பித்தலில் புதுமைகளைக் கையாண்டு வந்தால், அவரை அடையாளம் கண்டு பள்ளிக் கல்வித் துறையின் பாடத் திட்டக் குழுவில் இணைக்கும் வேலைதான் அது.

தனது கற்பித்தல் முறையையும், தன்னுடைய மாணவர்களின் திறமைகளையும் தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்களிடம் கொண்டு சேர்த்து, அவர்களுக்கும் தனது உத்திகள் சென்றடைய யூடியூபை நாடியிருக்கிறார் ஆசிரியை சித்ரா. அவ்வப்போது அதில் வீடியோ பதிவுகளை அப்டேட் செய்து வருகிறார். அரசுப் பள்ளி மாணவர்களின் ஆக்கங்களைப் படம்பிடிக்கும் சித்ராவின் யுடியூப் பக்க இணைப்பு https://www.youtube.com/user/chitra137