அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் 538 கல்லூரிகள் உள்ளன. இவற்றில்
பல்கலைக்கழக கல்லூரிகள், அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள்,
சுயநிதி கல்லூரிகள் உள்ளன.
மாணவ-மாணவிகளில் பெரும்பாலானவர்கள் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று
என்ஜினீயரிங் சேர்ந்து விடுகிறார்கள். ஆனால் பி.இ. முதலாம் ஆண்டில்
கணிதத்தில் ஏராளமானவர்கள் பெயிலாகுகிறார்கள். காரணம்
மனப்பாடம் செய்வதுதான். இந்த நிலையை மாற்றவும் வேலை வாய்ப்பையும் கருத்தில்
கொண்டு என்ஜினீயரிங் மாணவ-மாணவிகளின் தேர்வு முறையை சீரமைக்க அண்ணா
பல்கலைக்கழகம் முடிவு செய்தது.
அதைத்தொடர்ந்து தற்போது என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ. சேர்ந்துள்ள
மாணவ-மாணவிகளுக்கு 3-வது செமஸ்டர் முதல் தேர்வு முறையில் மாற்றம்
கொண்டுவரப்பட உள்ளது. அதாவது 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு
வருகிறது. இந்த முறை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி
என்ஜினீயரிங் கல்லூரி உள்பட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து என்ஜினீயரிங்
கல்லூரிகளிலும் அமல்படுத்தப்படுகிறது.
அதாவது இப்போது வினாத்தாளில் ‘ஏ’ ‘பி’ ஆகிய பிரிவுகளில் மட்டுமே கேள்விகள்
இருக்கும்.‘ஏ’ பிரிவில் 10 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும்
தலா 2 மதிப்பெண் உண்டு. அதுபோல ‘பி‘ பிரிவில் 16 கேள்விகள் கேட்கப்படும்.
தலா 5 மதிப்பெண் உண்டு.
ஆனால் இனிமேல் கேட்கப்படும் புதிய வினாத்தாள் விவரம் வருமாறு:-
கேள்வித்தாளில் ‘ஏ’ பிரிவில் எந்த மாற்றமும் இல்லை. ‘பி’ பிரிவில் 80
மதிப்பெண்களுக்கு பதிலாக 65 மதிப்பெண்களுக்கு கேள்வி கேட்கப்பட உள்ளது.
மேலும் ‘சி’ பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டு அதில் 15 மதிப்பெண்ணுக்கு கேள்வி
கேட்கப்படும். அந்த கேள்வியை மாணவர்கள் புரிந்தால் தான் எழுத முடியும்.
மாணவர்களின் அறிவை சோதிக்கும் வகையில் அந்த கேள்வி இருக்கும். நன்றாக
புரிந்திருந்தால் மட்டுமே பதில் அளிக்கமுடியும். இந்த புதிய முறை கேள்வி,
கொண்ட வினாத்தாள் தற்போது சேர்ந்து உள்ள மாணவ-மாணவிகளுக்கு 3-வது
செமஸ்டரில் இருந்து அமலுக்கு வருகிறது.
இந்த தகவலை அண்ணா பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.